தொடர்வண்டிப் பயணம்
அந்திவானத்தை
அடைக்கப் பார்க்கும் மேகங்கள்
அந்த மேகங்களை கிழிக்க முடியாமல்
உடைந்து சிதறும் செங்கதிர் கீற்றுகள்..
மேய்ந்தவாறே மெல்ல நடக்கும் ஆட்டுக் கூட்டம்
அவற்றை மேய்த்தவாறே சின்னநடை போடும் சிறுமி..
சிங்கம் போல் நிமிர்ந்து நிற்கும் ஒற்றை அரசமரம்..
அதனை சுற்றி பச்சைக்கம்பளம் நெய்து வைத்த பயிர் கூட்டம்..
தங்கமாக உருவெடுத்து நிற்கும்.. விளைந்த நெற்கதிர்கள்..
அன்னையைத் தேடி துள்ளி ஓடும் வெள்ளை கன்றுகுட்டி..
ஒத்தையடி பாதை..
என்பது வயது நிறைந்த ஒரு
இளைஞன் ஓட்டிச் செல்லும் மிதிவண்டி..
சின்னஞ்சிறு கிராம சமூகம்.. சிறு காட்டுக்கு நடுவே சில கூரை வீடுகள்..
கோழிகளும்.. ஆடுகளும்.. மாடுகளும்.. நாய்களும்..
சிட்டுக்குருவிகளும்.. பச்சைக்கிளிகளும்.. கூடியதொரு கூட்டுவாழ்க்கை..
அவற்றுடன்..
சின்னஞ்சிறுசுகள் கொஞ்சி விளையாடும் உண்மையான சமதுவபுரமாய்..
மரத்துக்கு ஆடைகட்டி அழகுபார்க்கும் கொடிகள்..
பச்சைத் தண்ணீர் வழிந்து ஓடும் கால்வாய்..
அதன் பக்கத்திலே.. மீன் பிடிக்க காத்து நிற்கும் நாரைக் கூட்டம்..
சிறகுகளை பரப்பிக்கொண்டு பறந்து செல்லும் பறவைக்கூட்டம்..
உயிரோட்டம் இருக்கும் ஒரு ஏரி..
அதில் உலாவிக்கொண்டிருக்கும் பறவைகள்..
என் மனமும் அதன் மேல் சில நாழிகை பறந்து சென்றதாய் உணர்ந்தேன்..
இத்தனை அழகா இந்த இயற்கை என்று எண்ணிக்கொண்டு
இன்புற்று சென்றுகொண்டிருக்கையில்..
மனிதன் உருவாக்கி வைத்த செயற்கையான கோர முகத்தையும் பார்க்க நேர்ந்தது..
ஒரு பக்கத்தின் அழகை மட்டும்
நிறைத்துக் கொண்டு போதுமென்று எண்ணாமல்..
இன்னொரு பக்கத்தையும் பார்க்கத் தூண்டியது மனம்..
இரசிக்கலாம் என்று திரும்பினேன்.. சோகம்தான் மிஞ்சியது..
பாலைவன நெடுஞ்சாலை.. நிலைகொள்ளாமல் ஓடும் வாகனங்கள்..
சிற்றுண்டி உணவகங்கள்.. குழம்பி நிலையங்கள்..
பரபரத்து ஓடும் மனிதக் கூட்டம்..
மனிதனைப் போல்.. சாலையை கடக்க காத்து நிற்கும் நாய்கள்..
கொத்து கொத்தாய் உதிர்ந்து கிடக்கும் நிலத்தின்மேல்
குத்தி நிற்கும் ஆயுதக் கற்கள்..
விவசாயம் செய்து வந்த மண்மீது..
விலைசாயம் பூசிவைத்து
விற்பனைக்காக தயார்செய்யும் தரகர் கூட்டம்..
எதிர்கால ஆசைகளை சுமந்து
அதனையும் வாங்க எத்தனித்து வந்திருக்கும் மனிதக் கூட்டம்..
ஒரே பயணத்தில்
எதிர்மறையான.. இருவேறு உலகங்களுக்குள் நடமாட நேர்ந்தது..