நல்மனிதராய் வாழ்ந்திட

நல்மனிதராய் வாழ்ந்திட...

கிறிஸ்துமஸ் தாத்தா வந்தாரே
தேவ இயேசுபிரான்
கதை இனிப்பு அள்ளித் தந்தாரே..

நம்பிக்கை ஒளி ஏற்ற
விண்ணுலகு விட்டு
மண்ணில் அவதரித்த
நட்சத்திர மைந்தராம்
தேவ இயேசுபிரான்..

வைக்கோல் அரவணைப்பே
வைடூரியபடுக்கையாய் ஏற்று
மாட்டுத் தொழுவத்தில்
மாணிக்கமாய்த் தவழ்ந்தவராம்
தேவ இயேசுபிரான்..

அடிபட்ட கன்னத்தோடு
மறு கன்னமும் காட்டும்
பொறுமையை உணர்த்தியதோடு
ஆட்டிற்கு அடைக்கலம் கொடுத்து
அன்பின் உயர்வை ஊட்டியவராம்
தேவ இயேசுபிரான்..

தலையில் முள் மகுடம் சூட்டி
தோளில் பாவச்சிலுவை சுமக்கச்செய்த
பாவிகளின் பாவங்களைத் தாங்கிய
கருணை வடிவானவராம்
தேவ இயேசுபிரான்..

சிலுவையில் ஆணியால் அறையப்பட்டு
மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து
இறைவன் நம்மோடு இருக்கிறாரென
உணர்த்திய ஒளி வடிவானவராம்
தேவ இயேசுபிரான்...

மரியன்னை மைந்தராய்
மண்ணில் உதித்து
மகிமை புரிந்து நல்வழி காட்டிய
மறையோன் தேவ இயேசுபிரான்
மகத்துவ நெறிகளைப் பின்பற்றி பாவ
மன்னிப்பு வேண்ட வேண்டா நிலை அடைந்த நல்
மனிதராய் என்றும் வாழ்ந்திடவே ...

கிறிஸ்துமஸ் தாத்தா வந்தாரே
தேவ இயேசுபிரான்
கதை இனிப்பு அள்ளித் தந்தாரே..!!

...நாகினி

இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள் குழந்தைகளே..!

எழுதியவர் : நாகினி (25-Dec-13, 4:59 pm)
சேர்த்தது : Nagini Karuppasamy
பார்வை : 89

மேலே