சுனாமி நினைவுகள்

இன்று சுனாமி தினம்.கடல்மாதாவின் கோரத்தாண்டவம் முடிந்து இன்றோடு ஒன்பது ஆண்டுகள் முடிந்து விட்டன.2004ஆம் வருடத்துக்கு முன் சுனாமி என்பது நமது சிலபஸ்சிலேயே கிடையாது.
நமது ஆறுகளில் பலமுறை வெள்ளப் பேருக்கு ஏற்பட்டதையும் ,அது பல்வேறு பட்ட கிராமங்களுக்கு பெரும் சேதத்தை விளைவித்ததை மட்டுமே அது வரை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம்.எனது தாத்தா காலத்தில் ஒருமுறை காவேரியில் வெள்ளம் ஏற்பட்டதை அவர் எங்களிடம் விவரிக்கும் போது ,ஒரு தென்னை மரம் அளவுக்கு ஆற்றில் அலைகள் வந்தததாகவும் அவர் கூறிய போது,கொஞ்சம் மிகைப் படுத்திக் கூறுவதாகவே நாங்கள் நினைத்துக் கொள்வோம்.
ஆனால் 2004-ல் ஏற்பட்ட ஆழிப் பேரலையின்போது ,உண்மையிலேயே இயற்கை எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது நமக்கு விளங்கியது.இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள் ,ராட்ஷதத் தனமான தனது கரங்களால்
இலங்கை ,இந்தோனேசியா,மற்றும் இந்தியாவின் பல கடற்கரை கிராமங்களை அடியோடு வளைத்துக் கொண்டு ,ஏறக் குறைய இரண்டரை லட்சம் உயிர்களையும் ,கோடிக்கணக்கில் அவர்களின் உடைமைகளையும் அழித்து விட்டுட்டுத்தான் ஓய்ந்தது.
இவையெல்லாம் நடந்து இப்போது ஒன்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன என்றாலும் அவை ஏற்படுத்திவிட்டுப் போன வடுக்கள் இன்னும் மறையாமல் மறையாமல்தான் இருக்கின்றன.

இந்த சுனாமி எதனால் ஏற்பட்டது என்பதை ஒருமுறையேனும் நாம் நினைத்துப் பார்த்தோமா என்றால் ,இல்லை என்றே பதில் வருகிறது. பல நூற்றாண்டுகளாக நமது கடற்கரை ஓரங்களில் அடர்ந்த காடுகளாகவே இருந்தது வந்துள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த ராஜராஜ சோழன் அப்போதே கப்பல் ஒட்டி ,ரோமாபுரி வரை வாணிகம் செய்து வந்த போதும் கூட இப்படிப்பட்ட ஆழிப் பேரலைகளை தமிழகமோ ,கீழை நாடுகளோ சந்தித்ததில்லை.

நவீன மயமாக்கல் என்ற வகையில் மனிதன் எப்போது ,காடுகளை அழிக்க ஆரம்பித்தானோ அப்போதே இயற்கை மனிதனிடம் கோபித்துக் கொண்டு இது போன்ற நிகழ்வுகளை காட்ட ஆரம்பித்து விட்டது.

கடற்கரை ஓரங்களில் இருந்த மாங்குரோவ் ,மற்றும் சுந்தர வதனக் காடுகள் ஏறக் குறைய அழிக்கப் பட்டு ,இன்று பல நாடுகளிலும் பெரிய பெரிய விடுதிகளும்,வீடுகளும் கட்டப் பட்டுள்ளன.
கடற் கரையானது பெரும்பாலும் அழிக்கப் பட்டு நகரங்களாக மாற்றப் பட்டுள்ளன.கரையோரம் இருந்த சவுக்கு மரங்களும்,தென்னை மரங்களும் ,பவளப் பாறைகளும் பெரும்பாலும் அழிக்கப் பட்டுவிட்டன.இப்போது கடற்கரை முழுவதும் மரங்களே இன்றி நகரங்களாகவே(நரகங்களாகவே) காட்சியளிக்கின்றன.இப்போது அடிக்கடி ஏற்படும் கடற்கரை சீற்றத்துக்கு கூட தூண்டில் வளைவுகளையும் சுற்றுச் சுவர்களையும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

இயற்கையாக நமக்கு இருந்த அரண்களை அழித்து விட்டு ,செயற்கையான சுவர்களை நம்பிக் கொண்டிருப்பது எந்த வகையில் பயன் தரும் என்பது தெரியவில்லை.

இனியாவது இயற்கையை அதன் போக்கில் விடுங்கள்.பொறுமையாக ஓடிக் கொண்டிருக்கும் ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டுவது,கடற்கரை ஓரங்களில் உள்ள இயற்கை அரண்களை அழித்துவிட்டு நகரங்களாக்குவது,போன்ற செயல்களில் ஈடுபட்டு இயற்கையைக் கோபப் படுத்தாதீர்கள்.

ஒரு காலத்தில் நகரமாக இருந்து இன்று அழிவின் சுவடாக மட்டுமே காட்சியளிக்கும் 'தனுஷ்கோடிக்கு"ஒரு முறையேனும் சென்று பாருங்கள்.இனி இயற்கையை அழிக்கும் இழி செயல்களில் ஈடுபடாமல் இருப்போமாக!

எழுதியவர் : கோவை ஆனந்த் (26-Dec-13, 8:01 am)
சேர்த்தது : s.m.aanand
பார்வை : 247

மேலே