மார்கழி வீதியில்

மார்கழி - இது
வீதிகளின் திருவிழா

பனி படர்ந்த காலை
அள்ளி தெளித்த நீர்
புள்ளி வைத்த கோலம்
புதிதாய் ஒரு காலை

கன்னி மான்கள்
புள்ளி வைத்து கோலம் போட
ஜன்னல் திறக்கும்
எதிர்வீட்டு கலைமான்கள்

அள்ளி சுருட்டிய முடியில்
துவட்ட மறந்த தண்ணீர்
நெற்றி பரப்பை தாண்டி
கன்னங்களில் வழிந்தோட
வாசலும் மெதுவாய்
கூட்டபட்டுகொண்டிருக்கும்

தரை உருளும்
பாவாடை
தாவணி விலகலோடு
இடுப்பில் அள்ளி சொருக
கை வளையல் சத்தம்
கோல புள்ளிகளை இணைத்திருக்கும்

எல்லை கடக்காத
வெள்ளை கோடுகளும்
மணலோடு கலந்த
வண்ண பொடிகளும்
வாசலை ஒப்பனை செய்திருக்கும்

புள்ளி மறந்த
கோலமும்
விடிய மறந்த
மார்கழியும்-வீதியெங்கும்
புலம்பி கொண்டிருக்கும்

வண்ணம் தீட்டிய
தேர்கோலம்
வெற்றிலை கிழவியும்
மெத்தன பேச்சை
வாய் அடைத்திருக்கும்

பூசணி பூக்கள்
சாணத்தில் பூக்கும்
அருகம்புல்லோ
அதனோடு மணக்கும்

காது கொடுத்து கேட்டல்
கால் கொலுசு சத்தம்
கோலப்புள்ளிகள் எத்தனை என்றுரைக்கும்
கதிரவன் வர
அடுப்படியில் பனி தொடர்ந்திருக்கும்

அதிகாலை ஒளியும்
அள்ளி முடிந்த கூந்தலும்
பின்னி வரைந்த கோலமும்
மார்கழி குளிரை மறைத்திருக்கும்
வனவாசம் போன சித்தரை கூட
சில வாசல் கவர்ந்திழுக்கும்
மார்கழி வீதியில்.....

எழுதியவர் : பாலமுதன் ஆ (28-Dec-13, 4:18 am)
Tanglish : margali veethiyil
பார்வை : 264

மேலே