சிக்கித் தவிக்கும் தமிழக மீனவ சமுதாயம்

சிறைக் கூடம் என்ன - இலங்கையின்
செங்கோட்டைக் கூடமா? - இல்லை
சிந்தனைக் கூடமா? - தமிழக மீனவ
சமுதாயத்தை - இலங்கை ராணுவம்
சிறைப் பிடிப்பது அடங்குமா?

சித்திரத்தை வரைந்தால்
சிந்திக்கலாம். - இயற்கை
சூறாவளி வந்தாலும்
சந்திக்கலாம். - மீனவ சமுதாயம்
சித்திரவதையில் அல்லவா
நித்திரையிலும் நடுங்கி வாழுது.

மூங்கிலிலும் ஓலையிலும்
மூடிய வீட்டிற்குள்
முடங்கி வாழும் - மீனவ சமுதாயம்
அடங்கி வாழ்ந்தாலும் - இலங்கை ராணுவம்
அடாவடியில் முயலுவதேனோ?

கடலோர மீனவர்கள் - அலையிலும்
உடல் சோர்வுப் பாராமல் - வங்கக்
கடல் மீது ஓடமிட்டு - எல்லைக்
கடவாமல் மீன் பிடித்தல்
கயமைக்குரியதா? - இலங்கை ராணுவம்
கட்டுப்பாடு மீறுதல் உரியதா?

திரிகோணமலை நீதிமன்றங்கள்
திரித்து நீதி திரிப்பதால்
தமிழக மீனவ சமுதாயம்
தவிப்பில் சிக்கித் தவிக்குது.

இயற்கைப் பேரழிவால்
இடறிப்போன நிலையினை
இலங்கை மறந்து வருவதேனோ?
இந்தியத்தாயின்
இந்த மக்களை வதைப்பதேனோ?

ஆள்கடத்தலை - இலங்கை ராணுவம்
நாள்கடத்தலில் தவறுவதே இல்லை.
நாதியற்று வாழும் - மீனவர்களை
நலமாக்க எவரும் இல்லை.

கடல் நடுவேப் பயணம் - இலங்கை
கடற்ப்படையால் - மீனவ
குலத்தின் உயிர்ப் பணயம்.- அவர்தம்
நலத்திற்கு எவர்தான் நிர்ணயம்.

பரந்து விரிந்தக் கடல் மீது
பங்குப் போட்டு விற்பதற்கு
முக்கடல் சங்கமம் என்ன சந்தைக் கூடமா?
அக்கடல் இலங்கையின் விற்பனைக் கூடமா?

இருளிலும் பகலிலும்
பொருள் இல்லா மீனவ சமுதாயம்
அருள் இல்லா உலகில் - வாழ
அவதரித்தப் பிறவிதானோ?
அரசியலிலும் இவர்கள் குறை
உரசினாலும் உன்னதத்தில்
உருப் பெறாத நிலை தானோ?

நாள்தோறும் உணர்த்துது ஊடகங்கள்.
நயவஞ்ச இலங்கையின் நாடகங்கள்.
சிக்கித் தவிப்பது மீனவரின் வேடங்கள்
சீக்கிரத்தில் தீரணும் இவர்களது ஆதங்கங்கள்.

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன். (28-Dec-13, 5:26 am)
சேர்த்தது : s.sankusubramanian
பார்வை : 156

மேலே