ஈழ மனமே எழுந்து வா

மனமே எழுந்து வா
நாளைய உலகம் உனது
இன்னலில் இருந்து மீண்டு வா
நிலவே வளர வா
பெரும் இருளுக்குப் பின்
ஒளிபெறும் நியதி.. பௌர்ணமியாய் நீ மிளிர வா..
மலரே பூக்க வா
அன்று விதையாய் விழுந்தாய்
நேரம் வந்தது மண்ணை முட்டி நிமிர்ந்து வா..
கனவே மெய்பட வா
நாளைய வரலாறு உன் பெயர் சொல்லிட
இன்றே எழுந்து ஒரு உரு கொண்டு வா..
உன்னை வெட்ட நினைக்கும்
இரும்பு மனங்களை.. உளி எனக்கொள்..
வீழும் ஒவ்வொரு அடியிலும்
இன்னும் அழகாய் உன்னையே நீ மெருகேற்றிக்கொள்..
பதுங்கு குழியில் மறைந்து மாண்டது போதும்
பயந்து ஒளிந்து கிடந்தது போதும்
மானம் இழந்த அவமானங்கள் போதும்
சின்னஞ்சிறு விழிகள்.. குருதியில் குளித்தது போதும்..
ஆயுதம் என்பது அழிவின் பாதை
ஆகையால் மனமே கொஞ்சம் அமைதிகொள்..
புவியைப் போல பொறுமை காத்திரு..
மரம் போல் மெல்ல துளிர்த்து வளர்ந்திடு..
வெட்டினாலும் நோகாதே..
வேர் இன்னும்
இந்த மண்ணில்
எங்கோ ஓர் மூலையில்
உனக்காக நீர் இழுக்கும்..
நீ மீண்டும் வளர்ந்திட
என்றும் அது துடித்திருக்கும்..
வீசி எறிந்தால்.. விதையாய் விழு..
குவித்து எரித்தால்.. காற்றாய் மாறு..
அடக்கி வைத்தால்.. பெரும் தவம் இரு..
ஆள நினைத்தால்.. அறிவினை வளர்..
உடல்கள்தான்.. உருத்தெரியாமல் சிதைந்தன
உயிர்கள்தான்.. வாழ வழியின்றி மாண்டன
மனங்கள் இன்னும்.. ஆயிரக் கணக்கினில்
நிலைகொள்ளாமல் உன்னை சுற்றித் திரிகின்றன..
தனிமையில் இல்லை நீ..
நீ.. வெற்றி பெற..
இங்கே
பல கோடி மனங்கள்..
அந்த
பரம்பொருளை வேண்டுகின்றன..
ஆகையால் மனமே கலங்காதிரு..
மெல்ல நடை போடு..
உன்
ஒவ்வொரு அடியையும்
நீ ஆழமாகப் பதிய வை..
எத்தனை முறை வீழ்ந்தாலும்
எழுந்திடுவான் இந்த ஈழத்தமிழன் என்று..
அந்த
வரலாற்றுப் பக்கங்களின்
பதிவுகள் உன்னை பறைசாற்றட்டும்..
பாவப் பட்ட பிறவி அல்ல நீ..
ஞாயிறு நீ..
எத்தனை கைகள் கொண்டும்
உன்னை மறைத்திட முடியாது..
உலகம்
இன்னும் உன்னிப்பாய்
இன்று உன்னை கவனிக்கின்றது..
ஆகவே
காற்றுள்ள பொழுதே தூற்றிக்கொள்..
தயங்கி நிற்காதே
அத்தனையும் முடியும் உன்னால்..
உன் சிந்தனையை
சிறைவைக்க முடியாது எவராலும்..
எனவே..
புத்துயிர் கொண்டு
புதுச் சிறகுகள் விரித்து
என் ஈழ மனமே எழுந்து வா..
அன்பால்.. அறிவால்..
இந்த உலகினை நீ வென்றிட வா..