முரண்பாடுகள்

காட்டு யானைகளின்
கழிவறை வரை வீடு கட்டுவோம்!
கோயில் யானைகளுக்குப்
புத்துணர்வு முகாம் அமைப்போம்!
என்றோ நடந்த குற்றத்துக்காக
அப்பாவி ஒருவரை சிறையிலடைத்து
அவர் ஆயுட்காலம் முடியும்போது
தவறென்று கருதி வெளியில் விடுவோம்!
சுனாமியால் செத்தவர்களின் வாரிசுக்கு
சுட்ட செங்கற்களால் வீடு தருவோம்,
மீண்டும் மீண்டும் மிரட்டும்-அந்தக்
கடற்கரை அருகிலேயே!
தேசியம் பற்றிப் பேசிக் கொண்டே
அந்நியக் கடைகளை அனுமதிப்போம்!
சர்க்கரை நோயால் செத்தவனுக்கு,
சாங்கிரி வைத்துப் படையளிடுவோம்!
நதிநீர் இணைப்பைப் பேசிப் பேசியே
காலம் முழுவதும் தொண்டை வரள்வோம்!
மதுவும் சிகரெட்டும் உடலுக்குத் தீங்கென்று
உலகம் முழுதும் மதுக் கடையைத் திறப்போம்!
அரைகுறை உடையுடன் ஆடிக் கொண்டே
கலாசாரம் பற்றிக் கவிதை வடிப்போம் !
லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதித்து
அதிகாரிகளைக் காட்டிக் கொடுப்போம்!
காட்டு வளங்களைக் கொள்ளையடித்துவிட்டு
இயற்கை கெட்டதெனக் கண்ணீர் வடிப்போம்!
இருந்தும் கெட்டான்,இறந்தும் கெட்டானென,
ஆட்சியாளனைத் தேர்ந்தெடுப்போம்!
புத்தகத்தினுள்ளே மயிலிறகு வைத்துக்
குட்டி போடு மெனக் காத்திருப்போம்!
குழந்தை பிறந்தவுடன் தேவையென்று
கணனிப் பரிசுடன் காத்திருப்போம்!
செய்யும் செயல்கள் ,சொல்லும் சொற்கள்
அனைத்திலும் ஏறுக்கு மாறாய்த் தான் நடப்போம்!
முரண்பாடுகளின் மொத்த உருவமென
ஊருக்கு நாங்கள் பறை சாற்றுவோம்!