நோயற்றே வாழ்வே குறையற்ற செல்வம்

படுக்கையில் இருந்தேன் பத்துநாள்
உடுக்கை இருந்தும் இழந்தவனாய் !
வாடியது உடலும் நோயுற்றதால்
தேடியது சுகத்தை மருத்துவத்தால் !
சுழன்றது மனமும் சூழ்நிலையால்
உழன்றது உள்ளம் உணர்வலையால் !
உணர்ந்தது நெஞ்சமும் உண்மையை
உடல்நலமே உயர்ந்தது உலகிலென !
அறிந்தே உரைத்தனர் முன்னோர்
புரிந்தே முதலில் முன்னுரையாய் !
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
அளவிலா செல்வம் இருப்பினும் !
பொன்னான வார்த்தைகள் அல்லவா
பொன்னும் பொருளும் தேவைதானா !
அசையா சொத்துக்கள் உண்டானாலும்
அசைந்திட நலமே என்றும் அவசியமே !
நெஞ்சில் கொள்ளுங்கள் நிலையாய்
நெடுநாள் வாழ்வதல்ல வாழ்க்கை
நலமுடன் இருத்தலே நிறைவானது
நலமாய் வாழ்வதே வாழ்க்கை என்று !
பழனி குமார்