தெரிந்து கொள்ளுங்கள் ’ஐ’காரக் குறுக்கம்
கவிஞர் கண்ணதாசனின் ’சின்னஞ் சிறுவயதில்’ என்ற இருவிகற்ப நேரிசை வெண்பாவில் ஈற்று இரண்டடி,
‘முத்தென்று சொல்லுதிர்த்த மோகக் கவிதைஎழில்
சித்திரத்தாள் பாராமல் சென்றாள்’.
கவிதைஎழில் சித்திரத்தாள் என்ற சீர்களை எப்படிப் பிரிப்பது? எழில் என்பது நிரையசை ஆக அல்லவா வருகிறது! என்று அகரம் அமுதன் அவர்கள் எழுதும் வலைத்தளத்தில் என் சந்தேகத்தைக் கேட்டிருந்தேன்.
நான் கவி/தை/எழில் என்பதை நிரை நேர் நிரை என்று அசை பிரித்தேன். அதற்கு அவர் கவி+தையெ+ழில் = நிரை+நிரை+நேர் = கருவிளங்காய் என்று பிரிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். சீர் நடுவில் வரும் 'தையெ' என்பதில் தை என்ற நெடில் எழுத்து ஐகாரக் குறுக்கமாகி, குறிலாக ஒலித்து 'தையெ' என்பது குறிலிணையாகவும் நிரையசையாகவும் வந்தது எனத் தெளிந்தேன்.
கீழே உள்ள ’சிவபோகசாரம்’ பாடலிலும் ’என்னைஉன்னிப்’ என்பது ’என்/னைஉன்/னிப்’ என்று அசை பிரித்து ’னைஉன்’ ல் ஐ வடிவம் திரிந்து சொல்லுக்கு இடையில் குறுகி வந்தும், குறிலிணை ஒற்றுடன் வந்தும் நிரையசையாகும்.
என்னை அறிவென்றான் என்னறிவில் ஆனந்தந்
தன்னைச் சிவமென்றான் சந்ததமும் – ...என்னைஉன்னிப்
பாரா மறைத்ததுவே பாசம்என்றான் இம்மூன்றும்
ஆராய்ந் தவர்முத்த ராம். – சிவபோகசாரம் 26
ஐகாரக் குறுக்கம்: ஆதாரம்: திரு.காளியப்பன் எசேக்கியல் அவர்களின் இலக்கணக் குறிப்புகள் 03 டிசம்பர் 19, 2013 கட்டுரை 03.
ஐ என்னும் உயிர் தன்னைத்தானே குறிக்கும் பொழுது இரண்டு மாத்திரை அளவானது.
அதுவே தனது வடிவம் மாறாமல், சொல்லுக்கு முதலிலோ, இடையிலோ அல்லது இறுதியிலோ வரும்பொழுது தன்னளவில் குறைந்துவிடும். இதற்கு ஐகாரக் குறுக்கம் என்று பெயர்.
எடுத்துக்காட்டு 1: ஐந்/தவித்/தான்/ — முதலில் வந்து வடிவம் மாறாமலேயே குறுகி ஒலித்தது.
எடுத்துக்காட்டு 2: வை/யத்/துள்/ – வடிவம் திரிந்து முதலில் வந்தும் மாத்திரை குறைந்தது.
எடுத்துக்காட்டு 3: மாசில னாத லனைத்/தற/ -- ஐ வடிவம் திரிந்து சொல்லுக்கு இடையில் குறுகி வந்துள்ளது.
எடுத்துக்காட்டு 4: வீழ்நாட் படாஅமை – படாமை என்பதில் இறுதியில் ஐகாரம் தன் வடிவம் திரிந்து குறுகி வந்துள்ளது.
நன்றி: 1. திரு.அகரம் அமுதன்.
2. திரு.காளியப்பன் எசேக்கியல்