நின்னையே தமிழென்று நினைக்கிறேனடி
சிட்டுக்குருவின்
சிறகடிப்பு இடைவெளியில்
சிறுகவிதை கோடி
சிந்தையிலே இயற்ற நினைத்தேன்
பெண்ணே நீ
சிரித்தே தலை சாய்த்தபோது - காதலால்
சீக்கிரமே என் இதயத் துடிப்பில் எழுதி முடித்தேன்..!
சிலை வடிவே
துடி இடையே
பனி மலரே
பைங்கிளியே
கனி இதழே
கவித் தமிழே
கண்மணியே
கலை வடியே
காதலிலே மொழிகின்ற சொற்கள் யாவும்
கவிதையடி....!!
கண்ணே உன் இமை அடிப்பில் நான் காண்பதெல்லாம் தென்றலடி....!!
அந்தத் தென்றல் என்ன செய்யும் தெரியுமா ?!
நினைவு வழி என் நெஞ்சம் வருடும்
அதனால் - மிக
நெருக்கமாய் என் மஞ்சம் திணறும்...
தனிமையில் - என் தமிழும் உதவும்..
அதனால் - மிக
தாராளமாய் கவிதை பெருகும்.....
நின்னையே தமிழென்று நினைக்கிறேனடி
காதலியே
நின்னையே ரதியென்று நினைக்கவில்லையே..!
நிச்சயம் ரதி ஒன்றும் அழகியில்லையே .....
நீ கோபப் படாதே......
சத்தியமாய்
அவளை நானும் பார்க்கவில்லையே....!!
இனிமைக்கு ஈடாக உன்னை நினைத்தேன்
எனினும்
இனியவளே.......
காதலித்தால் கருத்து பேதலிக்கும் என்பதாலோ
என்னவோ தெரியவில்லை - மேன்மையுறு
கன்னித் தமிழுக்கு ஈடாக
கவிதைப் பெண்ணே உன்னை நினைத்து விட்டேன்
தவறுதான்.......
தமிழுக்கு அடுத்தபடி இந்தத்
தரணி காக்கும் கடவுளடி - அதன்பிறகே இங்கே
தனை மறக்க வைக்கும் காதலடி.....!!