என்ன செய்யவில்லை

பல்லவனின்
பவித்ரமான சிற்பங்களில்
பார்வையை பறிகொடுத்தும்
பாவைகளின் பெயர்களை
பதித்திருக்கிறோம் .....
மேற்கு தொடர்ச்சி
மலைகளையும்
சமணப் படுகையையும்
பென்ஸ் லேம்போர்கினி
சொகுசு கார்களுக்கு
மயங்கியே
வெட்டி விற்றே
சரித்திரம்
படைக்கிறோம்......
பால்மணம்மாறா
பச்சிளம் பாலகனை
போருக்கு அனுப்பியே
நெஞ்சில் வேல்தைத்து
வீழ்ந்த மகனை
மடியில் ஏந்தி
புறமுதுகிடாமல்
வீர சொர்க்கம்
அடைந்தாயோ
என் கண்ணே என
கண்ணீர் சொரிந்த
மறப் பெண்ணின்
வீரத்தை மனதில்
விதைக்காமல்
தரிசாகவே
கிடக்கிறோம் .....
மூவேந்தர்களின்
புகழ் பாடிக்கொண்டே
அவர்களின்
புகழ் வாய்ந்த
சுவடுகளை
புவியில் தகர்த்து
புது அடுக்குமாடி
கட்டிடங்களை
எழுப்புகிறோம் ....
மதுரையில்
சங்கம் வைத்தே
முத்தமிழை
வளர்த்த பெருமையை
முத்தாக
ஏடுகளில் வடித்தே
உதட்டளவில் முணகி
கொள்கிறோம் ....
அஜந்தா எல்லோரா
குகை ஓவியங்களின்
அற்புத சிருஷ்டியில்
மனம் லயிக்கும்
அந்நியர்க்கு
அதனை காட்சியாக்கி
கூடாரத்தில்
ஒட்டகம் நுழைந்த
கதையாக மீண்டும்
அடிமையாகிறோம் ......
பண்பாட்டை கலையை
பாரம்பரியத்தை
பாடுபட்டு காக்க
பாங்குடன் அதனை
திரைகளில் சாயங்களாக
பத்திரமாய் பதுக்கி
வைத்திருக்கிறோம் .....
எம் மூதாதையர்கள்
விட்டுப்போன
விவேகத்தை
வீரமிக்க மண்ணை
விலைமதிப்பில்லா
பொக்கிஷங்களை
வீருப்போடு காக்காமல்
வெற்று காகிதங்களுக்காக
விலைபேசிக்
கொள்கிறோம் ....
பழையனதை
துச்சமாக எண்ணி
துடைத்து எறிந்து
புதியனவாய்
எம்மை புதுப்பித்துக்
கொள்கிறோம் ........ ..!!!