காதல் வாழ்ந்திருந்தால்

சாதி என்ன சாதியோ!
சண்டைதான் மீதியோ!
ஆதி சொன்ன சேதியோ!-ஆதி
மூலன் என்ன சாதியோ!
தொழில் முறைச் சமுதாயம்
தொடர்ந்திட்ட தொல்லையோ!
இழிவென்றும் ஏற்றமென்றும்-தொழிலை
எண்ணியதன் பாவமோ!
கூலி பெற்ற கூட்டங்கள்
கூடிவாழ்ந்த மடைமையோ!
கூட்டமே பேதமையோ!—பின்னே
குழுக்கள் ஆன சாதியோ!
தலைவர்கள் தோன்றலின்
தன்னலச் சதிதானோ!
நிலை குலைந்த பாமரரின்-வறுமை
நேர்ந்ததன் விதிதானோ!
உரிமைகளை! இழந்த ஏக்கம்
உணர்வுகளாய் எழுந்ததோ
எழுந்தநல் உணர்வுகள்--பெரு
எழுச்சியாய் மலர்ந்ததோ!
எழுச்சிகளைக் கனிகளாய்
எடுத்துக் கொண்ட தலைவர்கள்
வளர்ச்சிக்கு உதவுதாய்—பேத
உணர்வுகளைத் தூண்டினர்.
ஊரது ரெண்டு பட்டால்
கூத்தாடி கொண்டாட்டம்.
பாரெங்கும் சங்கங்களை—சாதி
பேர்களில் புத்துப்பித்தார்
சமநிலைப் பொருளாதாரம்
சலுகைகள் தானாதரம்.
நம்பிய நல்லோரும்—இன்று
நடப்பதுவும் பொறுப்பரோ!
எங்கிருந்து வந்ததோ!
இந்தச் சாதியோ!
என்றதுவும் சாகுமோ!-மனிதம்
வென்றதுவும் வாழுமோ!
காதல் வாழ்ந்திருந்தால்
சாதிகள் ஒழிந்திருக்கும்
பண்பதில் அன்பிருந்தால்—சாதி
படராமல் இருந்திருக்கும்,
கொ.பெ.பி.அய்யா.