பகிரங்கப்படுத்தப்படும் முகவரி
அண்டங்கள் தாண்டிய
ராட்சத உலகத்துக்குள்
இருள் சூழ்ந்த திறந்த வெளிகளினூடாக
கனவுகளின் வழிகளில்
அழைத்துச் செல்கிறது
மரணத்தின் ஒத்திகை.
இமை உறைகள் ஒட்டப்பட்டு
இருண்ட அஞ்சல் பெட்டிக்குள்
இடப்படுவதற்காக
உயிரின் மேல் விலாசங்களில்
குத்தப்படுகின்ற முத்திரை.
உழைப்பின் அசதிகளிலானதும்
உண்ட மயக்கங்களிலானதும்
சோம்பேறித்தனங்களிலானதுமான
கட்டாயங்களின் பேரில்
கண்களை கைது செய்து தன்
கோட்டைக்குள் அழைத்துச் செல்லும்
அசட்டுத் தைரியசாலி.
விழித்துக் கொண்டிருக்கும் எங்கள்
முதலாளிகளின் செவிப்பறைகளில்
சம்பள உயர்வு போர்வை
போர்த்தப் படுகின்ற
அத்தியாவசிய நிமிஷங்களில்
நிகழ்ந்து விடுகின்ற அதிசயம்.
காவல்காரர்களிடமிருந்து
களவாடப் பட்டு
காப்பற்றப்படுவதிலிருந்து
களவுகளின் அளவுகளை குறைக்கும்
விழிகளின் பசியானது
தன் விரதத்தை முடித்துக் கொள்ள
கண் அடைக்கும் சந்தர்ப்பங்களில்
வேலிகளே பயிர்களை விருந்தாக
பரிமாறும் அவலங்களுக்கு
போட்டுக் கொடுத்து விடுகிறது பந்தி.
உடல் அரசின் செயற்பாடுகளில்
அசமந்த போக்குகளை
கடைபிடிக்கும்
அசதி அமைச்சுகளின்
முடியாமைகளை காரணமாக்கி
நம்பிக்கை இல்லா தீர்மானம்
கொண்டு வந்து கவிழ்த்துவிடும்
எதிர்கட்சி.
கோடிகள் குவித்தவனிடமிருந்து
கொள்ளை போனது தெருக்
கோடியில் வாழ்பவனுக்குள்
சுதந்திரமாய் வாசம் செய்யும்
இது பசியைப்போலவே
வாழ்தலுக்காக
நிர்ப்பந்திக்கப்பட்ட நிதர்சனம்.
என்றாலும்
கொசுக் கடித்தாலும்
தேள் கடித்தாலும்
விழிகளில் மேல்த்தளங்களில்
வானவில்லை போர்த்திவிட்டு
ஒருவர் விழியில் ஒருவர் விழியால்
கனவுகளின் வண்ணத்துப் பூச்சிகளை
பறக்கவிட்டுக்கொள்ளும்
காதலர்களுக்கு இது
தொந்தரவுகள் இல்லாத தொடுவானம்.
சமத்துவத்தின் போதனைகளை
கண்ணுக்குள் மூடிவைத்து
சாய்ந்து விடுகின்ற எல்லோரும்
வாழ்தலின் ஓய்வூதியமாய்
நிரந்தரமாய் இந்த
நித்திரையை அடைந்து விடுகையில்தான்
பகிரங்கப்படுத்தப் படுகிறது
மீளாத் துயில் என்னும்
என்னும் இறுதி முகவரி.

