தேயிலைத்தோட்டத்து தேவதைகள்

கோட்டுப் போட்ட மனிதக் குரங்குகளின்
கூச்சலில் குலை நடுங்கும்
மலைத் தோட்டத்துக்
குருவிகள்.

பதங்கமாகி நாற் புறமும்
நறுமணம் பரப்பி
பூத்துக் கருகும்
புனித கற்பூரங்கள்

கொழுந்து கிள்ளிய செடிகளாய்
வளர முடியாது வரையறைக்குள்
வாழ்வைத் திணித்த
தேய் பிறைகள்.

ஊரும் அட்டைகளும்
உயர் பதவி அட்டைகளும்-உயிர்
உறிஞ்ச ஒட்டி உலர்ந்த
குருதிக் கொடையாளிகள்.

பட்டம் படிப்பு பதவி
ஆசை இன்றி வெட்டவெளிக்
குளிரில்உறைந்து கிடக்கும்
மட்டம் பார்க்கும் கம்புகள்.

உழைப்புக்கு ஊதியம் கிடைக்காது
ஊனமுற்ற சுமைகளை
மானத்துடன் வாழ சுமக்கும்
இடைக் கூடைகள்.

உரிமைக்காக வாய் திறந்தால்
ஓட ஓட விரட்டப் படும்
மலைத்தோட்டத்து
வெள்ளாடுகள்.

உலகத்தின் மூலை முடுக்குகளில்
உள்ளவர் நாக்குகளில்
சுவை கொடுத்து
எங்கோ ஓர் லயத்தில்
ஒடுங்கிக் கிடக்கும்
பசுமைப் புரட்சியாளர்கள்!

எழுதியவர் : சிவநாதன் (3-Jan-14, 3:31 am)
பார்வை : 126

மேலே