முயல் குட்டி

துள்ளித் துள்ளி ஓடும் முயல்
வண்ணமயமான மயில் .
மானைப் போல மருண்டு நிற்கும்
மயிலைப் போல நடனமாடும் .
குயிலை ஒத்த குரலில் பேசிக்
கோழியைப் போலக் கூவித் திரியும்
இவள்
கண்கள் இரண்டும் காண்பவர் நெஞ்சம்
கவர்ந்து கொள்ளும் காந்தப் பெட்டி
முத்தமிட்டு உள்ளங்களைக்
கொள்ளையிடும் வெல்லக் கட்டி
வண்ண வண்ண உடைகள் போட்டு
வான வில்லாய் வளையும் சுட்டி
அன்னைப் பசுவின் அன்புப் பிடியில்
ஆதரவாக அணைந்து நிற்கும்
அப்பாவோடு சேர்ந்துகொண்டு
ஆட்டம் போடும் கன்றுக் குட்டி
பாட்டி தாத்தா பாசம் வைத்துப்
பாதுகாக்கும் பவளப் பெட்டி
மார்புறத் தழுவி மன மகிழ்ந்தாட
மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோட
நேரில் வரும் நாட்கள் நோக்கி
காத்திருப்போம் ஆசைகள் தேக்கி .