அரசு மேல்நிலைப்பள்ளி

வக்கீல் வீட்டுத்தோட்டத்தில்
கல்லடித்துப் பறித்த
நெல்லிக்காய்களை
பயாலஜிவகுப்பில்
பூபதி சாருக்குத் தெரியாமல்
மோகனாவுக்கு
விநியோகம் செய்த போதும்...
இன்டர்வல் பெல்லில்
கூடைக்கார கிழவியிடம்
கீத்து மாகாய் வாங்கி
மிளகாய்ப்பொடி தடவி
நாக்குறிஞ்சி ருசித்த போதும்...
கலக்க வேண்டிய ரசாயனத்தின்
அளவு மறந்து பொய்
அடிவயிறு கலக்கிய பொது
அடிஸ்கேலில் சரவணன்
பிட்டெழுதிக் கொடுத்த
வேதியியல் செய்முறைத் தேர்வின் போதும்...
கந்தசாமி அய்யா
சொல்லச் சொல்லப் பாடமெழுதியபோது
திடீரெனத் தீர்ந்து போன
பேனா மையை
பிரபுவிடம் மூன்று சொட்டுக்
கடன் கேட்ட போதும்...
அறுந்து போன செருப்பின் ரகசியம்
தேவதைகளுக்குத்
தெரியக் கூடாதெனப்
பின்னூசி குத்திச்
சமாளித்த போதும்...
முட்டாள் மனசுக்குப்
புரியவில்லை
வாழ்க்கையின் வசந்தம்
கடந்து போகிறதென்று.
###