நினைப்பதை நடத்தி முடிப்பதற்கு

இப்போது இல்லாவிட்டாலும்
எப்போதோ ஒருநாள்
என்னிடம் பணமிருந்தால்
என்னென்ன செய்யலாம்
யோசித்துப் பார்க்கிறேன்.......

போரிலும், விபத்திலும்
பெற்றோரை இழந்த
பால்மணம் மாறா
இளம் பிஞ்சுகளுக்கு
பாதுகாப்பாய் ஒரு
காப்பகம் அமைக்கலாம்.....

புத்தகம் தூக்க வேண்டிய
துள்ளிக் குதிக்கும் வயதில்
கருங்கல் சுமந்து,
குடும்பச் சுமை சுமக்கும்
குழந்தைத் தொழிலாளர்க்கு
அறிவுக் கண் திறக்க உதவலாம்....

கல்யாணச் சந்தையில்
முப்பதுகளைத் தாண்டியும்
இன்னமும் விலைபோகாமல்
கட்டைப் பிரமச்சாரிகளாய்
முதிர்கன்னிகளாய் இருப்போர்க்கு
இலவசமாய் வரன்தேடிக் கொடுக்கலாம்....

வாழ்க்கைப் பாதையில்
சினிமா மோகத்தில்
தவறி விழுந்தவருக்கு,
விலைமாதாய் ஆனவருக்கு
நல்வழி காட்டி
தொழில் வாய்ப்பை உருவாக்கலாம்........

முற்போக்குப் போர்வையில்
பிற்போக்குத்தனம் செய்யும்
படைப்புலக ஆண்களுக்கு
அறிவுரை கூற
ஆலோசனை மையங்களும்
மனநல காப்பகமும் அமைக்கலாம்........

வீட்டு வன்முறையில்
காட்டுமிராண்டித்தனமாய்
ஈடுபடும் ஆண்களுக்கும்
விதிவிலக்காயிருக்கும்
மங்கையர் திலகங்களுக்கும்
அறிவுரையும், பாதுகாப்பும் வழங்கலாம்....

ஆணுமின்றிப் பெண்ணுமின்றி
சத்திர சிகிச்சைக்குப் பணமுமின்றி
திருமண ரேகையின்றி
காலமெல்லாம் கண்ணீர்விடும்
திருநங்கையர் நல்வாழ்வுக்கு
மனமுவந்து வாரியிறைக்கலாம்.....

மாற்று மதத்தவரின்
பண்பாட்டுச் சின்னங்களை,
போர் வீரர்களின் சிலைகளை
இரவோடிரவாக உடைக்கும்
கயமைத்தனம் கொண்டோரின்
கரங்களை துண்டாக்க
படையொன்று அமைக்கலாம் .........

இன்னும் பல செய்யலாம்
விதவைகளுக்கு,
கைவிடப்பட்டவர்களுக்கு,
மனநலம் குன்றியவர்களுக்கு
அவர்களின் மறுவாழ்வுக்கு
பணத்தை வாரியிறைக்கலாம்..... ..

எதிர்காலமே கைகொடு....
அதிர்ஷ்ட லாபச் சீட்டிலாவது
பணத்தை அள்ளிக்கொடு.......
நான் நினைப்பதை
செய்து முடிப்பதற்கு ..........!!!!
========================================

தோழி துர்க்கா

( மேலே சொன்ன எல்லாவற்றையும் செய்ய கண்டிப்பாக பணம் தேவை.

முற்போக்கு படைப்பாளிகள் மனம்வைத்தால் பல விதவைகள், விலைமாதுக்கள், திருநங்கைகளுக்கு மறுவாழ்வு கொடுக்க முடியும். பாலியல் மட்டும் வாழ்க்கை அல்ல. அதையும் தாண்டி அருமையான வாழ்க்கை உள்ளது. சமூக சிந்தனை உள்ள படைப்பாளிகள் அத்தகைய பெண்களுக்கு வாழ்வு கொடுத்து, சொல்லில் மட்டுமன்றி செயலிலும் சாதனை படைத்து சமூகத்தில் மதிப்புக்குரிய இடத்தில் உயர்ந்து நிற்கலாம்.

இன்னொன்றையும் நான் இங்கு சொல்ல வேண்டும். இதுவரை ஈழத்தில் நான் எந்தவொரு திருநங்கையையும் கண்டதில்லை. திருநங்கை என்பவர்களே அங்கு இல்லை என்றே என் அறிவுக்கு எட்டியவரை நினைக்கின்றேன். அயலக திரைப்படங்களில் மட்டுமே அவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களின் பேட்டிகள் கேட்டு மிகவும் வருந்தியிருக்கின்றேன். அரச உதவியின்றி அல்லல்படும் கடவுளின் `புனிதமான` படைப்பான அவர்களுக்கு எதிர்காலத்தில் உதவ வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாக உதவி செய்வேன்.)
......................................................................................

எழுதியவர் : தோழி துர்க்கா (6-Jan-14, 4:53 pm)
சேர்த்தது : தோழி துர்க்கா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 346

மேலே