ஜோடிப் பொருத்தம் - சிறுகதை பாகம் 1

என் பெயர் நந்தினி. என்னுடைய தோழியின் பெயர் சக்தி. நாங்கள் இருவரும் பள்ளி முதலே ஒரே வகுப்பில் படித்து வருகின்றோம். எனது பக்கத்து வீட்டில் தான் சக்தி வசிக்கின்றாள். சொல்லப்போனால் சக்தி எனது அத்தை மகள். இருவரின் எண்ணங்கள் சிந்தனைகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கும். இணை பிரியா தோழிகள் நாங்கள். நாங்கள் இருவரும் எப்பொழுதும் ஒன்றாகவே சுற்றுவோம், பள்ளியிலும் பள்ளி முடிந்தபின்னும். உறக்கம்தான் சக்தியிடம் இருந்து என்னைப் பிரிக்கும் ஒரே சக்தி.

தற்போது கும்பகோணத்தில் அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் இளநிலை கணிதவியல் முதலாம் ஆண்டு படித்து வருகின்றோம். எங்களுடைய ஒற்றுமையை பார்த்து அனைவரும் பொறாமைப் படுவது உண்டு.

அந்த வகுப்பிலேயே நாங்கள் இருவரும்தான் சிறந்த தோழிகளாகவும், அரட்டை அடிப்பதில் சிறந்தவர்களாகவும் விளங்கினோம். வாரத்திற்கு இரண்டு நாளாவது வகுப்புகளுக்கு முழுக்கு போட்டுவிட்டு படம் பார்க்க சென்றுவிடுவோம். எந்த படத்தையும் விட்டுவைத்ததில்லை நாங்கள்.

அப்படித்தான் ஒருமுறை நாங்கள் வழக்கமாக வகுப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு விஜய் நடித்த "குசி" படத்திற்கு சென்றிருந்தோம். அடுத்த நாள் எங்கள் வகுப்பு ஆசிரியர், நேற்று காலை வகுப்பில் இருந்தீர்கள், ஆனால் மதியம் இல்லையே ஏன்..?? என்று வருகைப் பதிவேட்டை பார்த்து வினவினார். பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்று சொல்வார்களே, அப்படிப்பட்ட நிலையில் நாங்கள் நின்றிருந்தோம். அப்பொழுது ஜெனி எழுந்து நந்தினிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் என்னிடம் விடுப்பு சொல்லிவிட்டு சென்றாள். சக்தி அவளுக்குத் துணையாக சென்றாள். நான்தான் உங்களிடம் சொல்ல மறந்துவிட்டேன் என்றாள்.

அவள்தான் எங்கள் வகுப்பின் பிரதிநிதி. அதனால் அவள் சொன்னதை ஆசிரியர் ஏற்றுக்கொண்டார். அன்றிலிருந்து எங்களுடன் ஜெனியும் தோழியானாள்.

இப்படியே ஒருவருடம் சென்றது. இரண்டாம் வருட துவக்கத்தில் ஒருநாள் மகாமகக்குளம் பேருந்து நிறுத்தத்தில் நாங்கள் மூவரும் நின்று கொண்டிருந்தோம். அன்று ஜெனி எங்கள் வீட்டிற்கு வருவதாக சொல்லி இருந்ததால், எங்களுடன் வந்திருந்தாள்.

அப்பொழுது ஜெனியின் தோழி ஒருவள், ஜெனியிடம் வந்து, ஏய்..!! நீ சிவாவிற்காக இங்கேயா காதிருக்கின்றாயா..?? என்று வினவினாள். உடனே நானும் சக்தியும் ஜெனியிடம், சிவாவா..!! யாரப்பா அது..?? எங்களுக்குத் தெரியாமல்..!! என்று கேட்டோம். எங்களின் அறிமுகம் இல்லாத அந்த தோழியின் முகத்தில் உலரிவிட்டோமோ என்கின்ற இறுக்கம் தெரிந்தது.

(தொடரும்...)

எழுதியவர் : சுவிதா (9-Jan-14, 2:23 am)
பார்வை : 215

மேலே