குறை
தெத்துப்பட்டி என்ற ஊரில் சாந்தனு என்ற இளைஞன் இருந்தான். அவனுக்கு நகரத்தில் வேலை கிடைத்தது. அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தான். அவனுக்குத் திருமணம் நடந்தது. தன் மனைவியை நகரத்திற்கு அழைத்து வந்து அவளுடன் குடும்பம் நடத்தினான்.
முதல்நாள் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினான். ""இங்கே யாருமே சரி இல்லை. எல்லாரும் நம்மைப் பார்த்து பொறாமைப்படுகின்றனர். என்னைப் பார்த்தாலே முகத்தைத் திருப்பிக் கொள்கின்றனர். யாரும் என்னுடன் பேசுவது இல்லை!'' என்று குறை சொன்னாள்.
""நீ இப்போதுதான் இங்கே வந்திருக்கிறாய். உன்னுடன் பழக அவர்கள் தயக்கம் காட்டியிருக்கலாம். நீ அதைத் தவறாகப் புரிந்து கொண்டிருப்பாய். நாளாக நாளாக எல்லாம் சரியாகி விடும். சிறிது பொறுமையாக இரு!'' என்றான் அவன்.
அடுத்த நாள் அவன் வேலை முடித்து வீடு திரும்பினான். ""அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் நம்மைக் குறை சொல்லிக் கொண்டிருந்தனர். நான் வருவதைப் பார்த்ததும் பேசுவதை நிறுத்தி விட்டனர். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை!'' என்றாள் அவள்.
இப்படியே அவள் நாள்தோறும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களைப் பற்றி குறை சொன்னாள். ""இனி நம்மால் இங்கே குடி இருக்க முடியாது. வேறு இடம் பாருங்கள்,'' என்று நச்சரிக்கத் தொடங்கினாள். "நாம் அதிகம் பழகாததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் குறை தெரியாமல் போயிற்றா? மனைவி சொல்வது போல அவர்கள் பொல்லாதவர்கள்தானா?' என்று குழம்பினான் அவன்.
அப்போது பெற்றோர்களிடம் இருந்து அவனுக்கு ஒரு மடல் வந்தது. அதில், "ஊர்த் திருவிழா ஒருவாரம் நிகழ உள்ளது. நீ குடும்பத்துடன் வர வேண்டும்' என்று எழுதி இருந்தது.
மனைவியிடம் அந்த மடலைக் காட்டினான். ""என் பெற்றோர்கள் ஊர்த் திருவிழாவிற்கு நம்மை அழைத்திருக்கின்றனர். எனக்கு அலுவலகத்தில் நிறைய வேலை உள்ளது. என்னால் வர முடியாது. நீ மட்டும் சென்று திருவிழா முடியும் வரை இருந்துவிட்டு வா!'' என்றான்.
அவளும் அவன் சொன்னது போலவே ஊருக்குச் சென்றாள். அங்கே ஒருவாரம் தங்கிவிட்டு வந்தாள்.
""பயணம் எப்படி இருந்தது? என் வீட்டில் உள்ளவர்கள் உன்னை நன்றாகக் கவனித்துக் கொண்டார்களா?'' என்று கேட்டான் அவன்.
""அங்கே மாடு மேய்க்கும் சுப்பனே என்னை எதிரியைப் போலப் பார்த்தான். மற்றவர்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? இனி என்னை அங்கே போகச் சொல்லாதீர்கள்!'' என்று சலித்துக் கொண்டாள் அவள். "சுப்பன் மாடுகளை மேய்ப்பதற்காக அதிகாலையில் வீட்டைவிட்டுச் செல்வான். இரவில்தான் வீடு திரும்புவான். பகலில் அவனை பார்ப்பதே அரிது. இரவிலும் எப்போதாவதுதான் கண்ணில் படுவான். அவன் இவளை எதிரி போலப் பார்த்ததாகச் சொல்கிறாள்.
"யாரைக் கண்டாலும் அவர்கள் தன்னை பார்ப்பதாகவும், தன்னைப் பற்றிதான் பேசுவதாகவும் நினைப்பதுடன், அடுத்தவர்களை குறை கூறும் இயல்பு இவளுக்கு அதிகம் உண்டு. நல்ல வேளை, இவள் பேச்சை நம்பி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சண்டை போடாமல் இருந்தேனே. இந்தக் கெட்ட பழக்கத்தை இவள் விடும்படி செய்ய வேண்டும். அதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்!' என்ற முடிவுக்கு வந்தான் சாந்தனு.