முக்கனிகளாய் முத்தினங்கள்

மனமொரு பெருந்தொட்டி
பழையன கழியட்டும் ;
இருக்கும்வரை பொருளுண்டு
புதியனவும் சேரட்டும் ;
போகியும் வேண்டுமென்க !

கதிரொளிக் கரத்தோன்
நானிலத்தின் தலைஞானி
பொன்சந்தனம் பூசித் திளைப்பான் ;
நித்தமும் போலல்லாது - தையில்
புதியதோர் விடியலுக்கு அழைப்பான் !

கருப்புச் சேவகர்களோடு
நடுவிலொரு பல்லக்கு
மூவினத்தோர் தோள்கொடுத்ததாய்
முழு உலகும் திண்டாடும்
பொங்கலென்றே கொண்டாடும் !

பருத்த இடையுடையாள்
பக்தியின்கால் மெய்சிலிர்ப்பாள்
மஞ்சள் கிழங்கு பூட்டி
மங்கல முகம்தனைக் காட்டி - கொழு
வீற்றிருப்பாள் வெண்கலக் குறுநகையோடு !

உழவர்பெருமக்களவர் சேயாகக்
கையடங்கிக் கரையேறுவாள்
ஆதியவள் அன்னபூரணியாள் ;
அக்குலப் பெயராலே
திரு செய்வோம் உழவர்த் திருநாளில் !

உலகத்துக் கிளைகளில்
வசிக்கும் தமிழ்ப் பறவைகளே
நமை ஏற்றும் அற்புதம் நமக்கே ;
முக்கனிகளாய் முத்தினங்கள் ,
இனியனவாய்க் காண்போம் ;

வண்ணங்கள் நிறைத்து
சர்க்கரை தடவக் காத்திருக்கிறது
வாசல் கண்ட கோலமும்
இன்னமும் என்ன வேடிக்கை
பொங்கலோ பொங்கல்.....!

எழுதியவர் : புலமி (14-Jan-14, 1:11 am)
பார்வை : 655

மேலே