கல்லணைக்கோர் பயணம் 04

கல்லணைக்கோர் பயணம்: 04
(இடையாற்றுமங்கலதிலிருந்து)

மீண்டும் நடக்க துவங்கினோம்
தண்ணீர் பந்தலை நோக்கி
இடையாற்றுமங்கலத்தின் எல்லையது
உயர்ந்த கொள்ளிடக்கரையின்
இருமருங்கிலும் பசுமை
தாண்டவமாடும் அழகுகரையது
அரிய பறவைகளும்
சிறகை விரித்தாடும்
சில நேரங்களில்..

உழைத்த உழவனின்
உழைப்பை பாராட்டி
தங்க கதிர்களை
நெல்மணிகளாய் தாரைவார்த்து
சூரியன் செல்ல..
பசுமை போர்த்திய
வயலுக்குள் ஆங்கங்கே
தங்கநரை தட்ட..
ஜொலிக்க துவங்கின
வயல்களும் சொர்க்கமாய்..

வாய்க்காலின் நீரும்
இயற்கையின் நிறத்தை
இயல்பாய் பூசியவாறு
அன்னநடை பயில..

வரப்போர வயல்களின்
அடர்ந்த புற்களில்
அதிகம் வளர்ந்த
நுனிபுற்களை மட்டும்
திருப்தியாய் தின்று
திருத்தம் செய்தவாறே
வாய்க்கால் நீரை
நிறைவாய் பருகி
உண்ட மகிழ்ச்சியில்
அம்மா நன்றி
என்றது இயற்கைப் பார்த்து..

அடர்ந்த வாழையின்
வளைந்த குலைகள்
பணிவோடு வரவேற்க..
வாழை இலைகளோ
வலிக்க வலிக்க
கையசைத்தன விடாமல்..

இடதுபுறம் இவ்வழகும்
வலதுபுறம் நிழலணுகா
பரந்த தோட்டங்களும்
பசுமையின் உச்சமாய்
பரவசமூட்டின எங்களை..

(பயணிப்போம்..004)

புகைப்படங்கள் : Alexnathan Edward Andrews
இடம் : இடையாற்றுமங்கலம்

எழுதியவர் : ஆரோக்யா (15-Jan-14, 6:30 am)
பார்வை : 57

மேலே