இளையராஜா எங்கள் இதய ராஜா

( 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 02.06.13 சேலத்தில் இளையராஜாவின் ரசிகர்கள் நடத்திய
விழாவில் படைக்கப்பட்ட கவிதை )

இளையராஜா
அன்றும்
இன்றும்
என்றும்
எங்கள்
இதயங்களின் ராஜா ...

தமிழுக்கு வடிவமேன்பார் ...
அழகிய முருகனை
மொழிகளிலே வடிவுகொண்டவள்
தமிழ் மட்டும்தானே...?

படைத்தவனுக்கும் வடிவுண்டா....?
தாய் ...
வேதங்களாலும்
விளக்க
முடியாத
இறையின்
இரெண்டெழுத்து
வடிவம்
தாய்.

கற்பனைகள்
அனைத்தும் கூடி
கருத்தாய்
ஓர் வடிவம்கொண்டால்....
உங்கள்
கற்பனைகள்
அனைத்தும் கூடி
கருத்தாய்
ஓர் வடிவு கொண்டால் ....
வடிவம்...??
வேறு யார் .....
அன்புக் காதலியை தவிர...!!


கருப்பையின் சலனத்திலும்
ஆழிப் பேரலையிலும்
துளிர்க்கும் மழையிலும்
இமைகளின் அசைவிலும்
இன்னும் , இன்னும்
பிரபஞ்சத்தின்
எல்லா இயக்கங்களிலும்
அதிகார மையமாய்..
ஆட்சியில் இருப்பது
இசைதானே...?
இணைக்கும் அந்த
இசைக்கும்
வடிவுண்டா....?
உண்டு
உயிர்களை அசைக்கும்
அந்த இசைவடிவம்
வேறு யார்.... ?
இளையராஜா ..
இளையராஜாவேதான் .
i

" தீபத்தில் "
( இளையராஜா
முதல்முறையாக
இசை அமைத்த
படம்
"அன்னக்கிளி" அல்ல ..
தீபம் !! )
ஏற்றிவைத்த
இசையின் வெளிச்சத்தில் ....
நீ
தீபத்தில்
ஏற்றிவைத்த
இசையின் வெளிச்சத்தில்
முட்டி, முட்டிப்
பால்குடிக்கும்
விட்டில் பூச்சிகளாய் ..
இன்னுமே
மயங்கி கிடக்கிறோம்
நாங்கள் ..!

இசையின்
பரிமாணத்தை
தமிழர்கள்
அறிந்து கொண்டதே
இசையின்
பரிணாமமே ...
நீ
வந்த பிறகுதானே ...?!

அந்தபுரங்களிலும்
அரண்மனை
விருந்து மண்டபங்களிலும்
அடிமைப்பட்டு கிடந்த
சங்கீத்தை
சிறைமீட்டு
வீதிக்கு
கொண்டு வந்தவன் ...
பட்டுக்கோட்டை !!
வீதிக்கு வந்த
சங்கீத்தை
சாமானியர்களின்
காதுகளுக்கே
இழுத்து வந்தவன்
நீயல்லவா
இளையராஜா
செவிகளின் ரோஜா.... !

பண்ணையபுரமே...
இனி
என்றென்றும்
இசை மதத்தின்
புண்ணிய ஸ்தலம்
என்று
பூஜிக்கப்படும் .

கருப்பு நிறத்தையும்
காதலிக்க...
கவனிக்கவும்
கன்னியர்
கருப்பு நிறத்தையும்
காதலிக்க ..
இளையராஜா
நீயும்
ஓர் காரணமல்லவா...??

இசைக்காய்
எத்தனயோ பேர்
தவமிருக்க
இசை செய்த
தவமே...
இளையராஜாவாய்
வந்தது....!!


இன்று
இரைச்சலுக்கும்
இசைக்கும்
வித்தியாசமில்லாமல்
போனது
கொடுமை .....
காலக்கொடுமை .
இரைச்சலைக்கூட
இசையாய்
வடிப்பது
அருமை ..
ராஜா
உன் அருமை .. !!

எத்தனை
காதலர்களை
கட்டிப் போட்டிருக்கிறது
உன் பாடல்கள் ..?
எத்தனை
பாடல்களை
முணு, முணுத்துக்
கொண்டிருக்கிறது
எம்
உதடுகள்
அனிச்சையாய்.... ??!

காதலர் தேசத்தின்
தேசிய கீதமல்லவா...
நீ
இசையமைத்த
பாடல்கள் . .?

" ஆயிரம் தாமரை மொட்டுக்களே .." தான்
இன்னமும்
காதலின் தேன்
நிரம்பி வழிகிறது ...
மகரந்த கிடங்கே
மண்டிக்கிடக்கிறது .!


தேசத்தின்
இறப்பு விகிதத்தை
கணிசமாக
குறைப்பதில் ..
உனக்கும்
பங்குண்டு
இளையராஜா.

லைலா மஜ்னு
அம்பிகாபதி அமராவதியென்று
இறந்தபிறகுதான்
வாழ்க்கையென்று ..
சமாதிகளில்
அடங்கிப் போயிருக்க
வேண்டிய
காதலைக்கூட ..
லைலா அம்பிகாபதியென்றொ
அமராவதி மஜ்னுவென்றொ
இருக்கும் பொழுதே
வாழவாவது
வைத்துக்கொண்டிருக்கும்
தந்திரத்தை ..
உன் இசையால்
மட்டுமே
சாதிக்க முடியும்
காதலர் தேவனே....!!

நிஜமாக
வாழ்வது மட்டுமல்ல ...
நினைவுகளோடு
வாழ்வதும்
காதல்தானே....
என்று
புரிந்துகொண்டவனல்லவா நீ...??

காதல் காயங்களுக்கு
உன் பாடல்கள்
ராஜா
மருந்தல்ல
மாற்று ...
ஆம் ..
மாற்று !


வருத்தமோ
துக்கமோ
மரணமோ
சலனமோ
இன்பமோ
துன்பமோ
எல்லாவற்றிலும்
கூட வரும்
உன் இசையும் ..
உயிர் நண்பனல்லவா ....?!

ராஜா ...
பழைய சோறும்
கட்டித் தயிரும்
எச்சில் ஊரும்
மாவடுவும்
மெல்ல ....
என் காதுகளை
வருடும்
உன் இசையும்
இருக்குமானால் ...
ஒலிக்குமானல் ...
மரணம்
மரணம் கூட ...
எனக்கு
சம்மதமே...!!!

எழுதியவர் : murugaanandan (15-Jan-14, 11:00 am)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 97

மேலே