மூன்றெழுத்தில் அழியா ஓவியம்
மூன்றெழுத்தில் கவிதை ஒன்று முது மொழியாய் வாழுதிங்கே
தாய் தமிழும் தரணி வென்று முதன்மை மொழி ஆனதிங்கே
பன்னிரு விழி பாலகனும் படித்து வளர்ந்த தனி மொழியாம்
பல்லாயிரம் நூல்கள் கொண்டு பழுத் திருக்கும் கனி மொழியாம்
தாமரையின் இதழ் எனவே தமிழ் இனமும் விரிந்திருக்கும்
தொப்புள் கொடி தண்டேனவே தாய் தமிழும் இணைத்திருக்கும்.
இலக்கியத்து சுரங்கத்தையே இன்மகளும் ஈன்றெடுத்தாள்
கல்வடித்த சிற்பமென உலகிலவள் கால் பதித்தாள்
காப்பியங்கள் ஐந்துண்டு எண்ணில்லா செய்யுளுண்டு
உலகிற்கே மறையுண்டு கரை கடந்தும் வெற்றியுண்டு
மாத்திரை அளவில்தான் இலக்கண வைத்தியம் தந்தது
இன்னிசை மொழியாய்தான் தீரா பைத்தியம் வந்தது
அகம் என்றும் புறம் என்றும் வரையறையாத மானுடத்தை
நானூறாய் இரண்டிற்கும் வரிவரைந்து வாழ வைத்தாள்
அன்னியத்து ஆதிக்கம் அடிபணிய வைக்காது
நம்மைப்போல் பலர் இருக்க அன்னை மொழி பொய்க்காது
ஈராறு எழுத்துக்கள் உயிராக அவள் வடித்தால்
முத்தான கோடி உயிர் எழுத்துக் கொன்று அவள் படைத்தாள்
தமிழ் தாயின் மடியினிலே பிள்ளைகளாய் தவழ்ந்திருப்போம்
அவள் - கற்பினையே களவாடும் சிங்கத்தின் வாள் பறிப்போம்
ஆட்டும் அவை வாலினையே ஒட்டவே வேர் அறுப்போம்
தமிழ் - கொடிகள் பல மேகமென வானம் எங்கும் பறக்குது
துளி துளியாய் தமிழ் மழையால் உலகின் வளம் பெருக்குது
மேலும் - எண்ணில்லா யுகங்கள் பல அழியாது நிலைப்பது!!!
--svshanmu
15 சனவரி 2014