சொற்களை சேமிக்கும் கவிஞன்
ஆரம்பத்தில் ஒரு பொழுது போக்கிற்காக
சொற்களைச் சேகரித்த கவிஞன் ஒருவன்
பின்னாளில் அதீத ஆசையுடன்
அதிக சொற்களை சேகரிக்க ஆரம்பித்தான்.
கடற்கரைகளில், கோயில்களில்
சமுதாயக் கூடங்களில், சந்தைத் திடல்களில்
முதியவர்கள் அளவளாவும் திண்ணைகளில்
சில சமயம் மழலையர்களின்
ஆரம்பப்பள்ளிக் கூடங்களில் என
அதிகமாக சொற்கள் புழங்கும் இடங்களை
முதலில் தேர்ந்தெடுத்துக்கொண்டு
சொற்களைச் சேகரிக்க ஆரம்பிப்பான்.
தனிமையான கடற்கரை ஓரங்களில்
ஒரு நிலாக் காலத்தில்
அவன் சொற்களைத் தேடிப் பயணித்து
வெறும் கையுடன் வீடு திரும்பும்போது
அவனையும் அறியாமலேயே
அவன் கால் அணிகள்
கவர்ந்து கொண்டு வந்திருந்தது
காதலர்களின் ரகசிய சொற்களை.
அலங்காரமான சொற்களை
ஆடம்பரமாக நடுக்கூடத்திலும்,
அதிக பயன்பாட்டிற்கான சொற்களை
படுக்கை அறையிலும் சேமித்திருந்தான்.
வேண்டாத சொற்களை
குழி தோண்டி தோட்டத்தில்
புதைத்ததோடு மட்டும் இல்லாமல்
ரகசியக் குறியீடும் செய்திருந்தான்.
அப்போதெல்லாம சொற்களை இழந்த
கிராம மக்களில் யாராவது
இயற்கையின் பேரழகைக் கண்டு வியந்து
முக பாவங்களால் வர்ணித்தால்
அதைக் காண
அவன் பின்னே சென்றுவிடும்
பெருந்திரளாக மக்கள் கூட்டம்.
கடற்கரை ஓரங்களில் இருக்கும்
தென்னை மரங்களில் இருந்து கொண்டு
மக்கள் கூட்டம் கூட்டமாக
விடியலை ரசிக்கலானார்கள்.
செமித்த சொற்களின் முணுமுணுப்பு
தொடர் பேரிரைச்சலாக மாற
மன நோயாளியாக மாறிய கவிஞன்
மரித்தும் போனான்
ஒரு மழைகால விடியலில்.
தேவைக்கு அதிகமான சொற்களை
மரித்தவன் வீட்டிலிருந்து
எடுத்துக்கொண்டு போன கிராம மக்கள்
இயற்கையையும் காலை உதயத்தையும்
மீண்டும் ரசிக்கலானார்கள் முன்போலவே
ஆனால், மூடிய வீடுகளில் இருந்து கொண்டே