ரகசியங்கள் மேலும் ரகசியங்கள்

பகிர்ந்து கொண்டிருக்கிறேன்
ஏராளமான ரகசியங்களை
உன்னிடம் மட்டுமே.

ஐந்து வயதில்
குளக்கரைப் படிக்கட்டில் அமர்ந்து
மீன்களுக்குப் பொறி போட
துள்ளி எழுந்த ஒரு விடலை மீன்
என் சுண்டு விரல் கடித்ததை.

முறைப் பெண் என்று
முதலில் அறிமுகமான
மலர்க்கொடிக்குப் பிடிக்காதென்று
பொக்கிஷமாகப் பாதுகாத்த
அரும்பு மீசையை
ரகசியமாக வழித்தெடுத்ததை.

என் இருபது வயதில்
அக்காவிற்குத் திருமணமாகி
மாமாவுடன் செல்ல
அவளைக் கட்டிப் பிடித்து
போகவிடாமல் தடுத்து
தேம்பி அழுததை.

வேலை தேடி பட்டிணம் வந்த பிறகு
விடுதியின் காரை பெயர்ந்த
சுவரோவியங்களில்
அம்மாவின் முகம் கண்டு மகிழ்ந்ததை.

இப்படியாக எல்லாவற்றையும்
பகிர்ந்து கொண்டிருக்கிறேன் உன்னிடம்
என் காதலைத் தவிர

எழுதியவர் : பிரேம பிரபா (16-Jan-14, 11:56 am)
பார்வை : 146

மேலே