இரவு

தாரகை பூக்கும் செடியைத்
==தாங்கிடும் நிலமாய் வானம்.
தேரென நிலவைக் கூட்டி
==தெருவினில் அழைத்துச் செல்லும்
சாரதி யாக இருந்து
==சகலரும் ரசிக்கும் வண்ணம்
கார்முகில் எழிலைத் தாங்கிக்
==காரிருள் கிழிக்கும் இரவு.

கூடலில் மயங்கும் உறவின்
==கூட்டினுள் அடையு முயிர்கள்
தேடலை தீர்த்து வைக்கும்
==தேவதை வடிவம் இரவு.
பாடலை எழுதும் கவிஞன்
==பல்லவி சரணம் போட
நாடிடும் சாந்தம் வழங்கும்
==நற்கவி ஊற்றாம் இரவு

பகலதன் அருமை புரியா
==பாமரர் நெஞ்சுக் குள்ளே
அகலமாய் இருக்கு மந்த
==ஆணவம் மறைந்து மண்ணில்
சகலரும் உணர்ந்து கொள்ள
==சமைக்குமோர் நெறியைப் போன்று
திகழ்ந்திடும் இரவின் தருணம்
==தீஞ்சுவை அணியும் வருணம்!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (17-Jan-14, 2:54 am)
Tanglish : iravu
பார்வை : 779

மேலே