கைநாட்டுக் கவிதைகள் 14
முதல் கடுதாசி!
அன்புள்ள
அப்பன் ஆத்தாவுக்கு
உங்க மக
வெள்ளையம்மா
இங்க பக்கத்துவீட்டுல
இருக்கும் ஆறாப்பு
படிச்ச அஞ்சலை மூலமா
எழுதுற கடுதாசி
நான் நல்லாயிருக்கேன்....
உங்க ரெண்டு பேரோட
சொகத்துக்கும்
ராசண்ணன், மணியண்ணன்,
சின்ன அண்ணன்
அப்பத்தா, அய்யா,
நம்ம சொந்தக்காரங்க,
பொட்டிக்கடை
ராமு மச்சான்,
வசந்தி, அலமேலு
மத்தபடி நம்ம வீட்டு
மயிலப் பசு
ஆடு, கோழி
அத்தனையோட
சொகத்துக்கும்
பதில் கடுதாசி
எழுத வேண்டியது.....
இங்க எங்கவீட்டுக்காரரு,
மாமியாரு, மாமனாரு,
நாத்தனாரு, கொளுந்தனாரு
மற்றும்....
இந்த பத்து நாள்ல
எனக்கு பழக்கமாகிவிட்ட
எல்லோரும்
இங்க சவுக்கியம்
விசயம் என்னன்னா
நீங்க எனக்கு
செஞ்சு போட்ட
நகை நட்டை எல்லாம்
எடை போட்டு
எண்ணிப் பாத்த
எங்க மாமியா
"சொன்னதுல
முக்கா பவுனு
கொறையுதே"ன்னு
கேட்டாக
"ஆடிக்கு போறப்போ
அப்பா செஞ்சி
போடுவாக"ன்னு
சொல்லிட்டேன்
எங்க
வீட்டுக்காரருக்குத்தான்
நீங்க போட்ட மோதிரம்
மோதிர விரலுக்குள்ள
நொழய மாட்டேங்குது
சுண்டு விரலுக்குத்தான்
பத்துது
'அரை பவுனுதானா?'ன்னு
அவரு கேட்டாரு
தலை தீபாவளிக்கு
போறப்ப
உங்க கட்ட விரலுக்கே
காணுற மாதிரி
ஒரு பவுன்ல
எங்கப்பாவ
செஞ்சு போடச்
சொல்றேன்னு
சொல்லிப்புட்டேன்
"சீரு, சாமானெல்லாம்
செட்டி மொறயா
இருக்கு"ன்னு
எங்க சின்ன மாமியாகூட
மெத்த புகழ்ந்துச்சு
ஆனா
'கட்டில்'தான்
ராத்திரியில கீச்கீச்சின்னு
சத்தம் வருது
ஒங்க ஊரு ஆசாரி
மரத்துல செஞ்சானா?
இல்ல....
மரத்துல திரியுற
அணில் குஞ்சுகள
அதுக்குள்ள
அடைச்சு
வச்சிருக்கானா?ன்னு
என் நாத்தனா
நக்கல் பண்றா
பொங்கச்சீரு
செய்யிறப்போ
காரக்குடி சந்தையில
புதுக்கட்டிலா
அப்பா வாங்கியாந்து
தருவாகன்னு
சொல்லிட்டேன்
என்னடா இவ....
கல்யாணத்துக்கு
வாங்குன கடன
அடைக்கவே
எத விக்கிறது?ன்னு
விக்கித்து நிக்கயில
ஆடி, ஐப்பசி
அடுத்து வரும்
'தை'க்குன்னு
பட்டியல் போடுதேன்னு
அப்பா - என்னத் தப்பா
நினைக்காதீக!
செரம்மத்தோட செரமமா
இத மட்டும்
செஞ்சிருங்க
ஏன் சொல்றேன்னா...
இங்க
என் நாத்தனாவுக்கு
மாப்புள பாக்கறாக
முப்பது சவரன்
கட்டிலு, பீரோலு,
பித்தளை அண்டா,
ஒரு ஏக்கர் நெலம்
ஆடு - மாடுன்னு
அத்தனையும் என்
மாமியா
சீரு செய்ய
ரெடியா இருக்குது
அதனால,
எப்படியாவது நம்ம
பெரியண்ணன்
ராசுவுக்கு பேசி
முடிச்சுப்புடுவோம்
எங்க வீட்டுக்காரருகிட்ட
ராத்திரிக்கு ராத்திரி
எடுத்துச்சொல்லி
அவர ஒத்துக்க
வச்சிப்புடுறேன்
நம்ம ராசு அண்ணன்
மஞ்சு விரட்டுல
மாடு புடிச்சதையும்
ஈ, எறும்புக்குக்கூட
கேடு நெனைக்காத
அதோட
ஈவு, இரக்கத்தையும்
என் நாத்தனாருகிட்ட
சொல்லிச்சொல்லியே
அது மனசுலயும்
அண்ணன் மேல
ஒரு நல்ல
அபிப்ராயத்தையும்
கௌப்பி விட்டுட்டேன்....
அதனால,
நீங்க மட்டும்
மெத்தனமா இருக்காம,
ஆடிக்கு வரும்போது,
சொச்ச நகை
முக்காப் பவுன
செஞ்சு போட்றதுக்கு
தயாரா இருங்க
அதோட,
அவருக்கு அரை பவுனோட
கொறை பவுன் சேத்து
மொக்கையா மோதிரத்த
தீபாவளிக்கு போட்டுடுங்க
அப்படியே,
கத்தாத கட்டிலையும்
பொங்கச் சீருல
குடுத்திடுங்க
இந்த மூனையும்
முடிச்சாத்தான்
எங்க மாமியாகிட்ட
நம்ம ராசு அண்ணன்
சமாச்சாரத்த
ஒடச்சு பேசுறதுக்கு
எனக்கு
கௌரதையாயிருக்கும்
மத்தபடி
உங்களையும்
நம்ம ஊரையும்
விட்டுட்டு இருக்குறதுதான்
மனசுக்கு கஷ்டமாயிருக்கு
புது எடம், புது ஊரு,
பழகாத மனுசங்க
ஆனாலும்,
அவரு அணைப்புல
உங்க நெனப்ப மறந்து
வாழக் கத்துக்கிட்டிருக்கேன்
அப்பா
உங்க ஒடம்ப
பத்தரமா பாத்துக்குங்க
ஆத்தாவ
அடிக்கடி திட்டாதீங்க
நான் சொன்னத மட்டும்
மனசுல வச்சுக்கிட்டு
ஏற்பாட்ட
வெரஞ்சு செய்யுங்க
அப்பத்தான்,
என் மூலமா
நீங்க விட்டத
நாத்தனா மூலமா
நாம மீட்டுப்புடலாம்
மத்த விசயம்,
ஒங்க பதில் கண்டு
இப்படிக்கு
உங்க அன்பு மக
(வெள்ளையம்மா)