கைநாட்டுக் கவிதைகள் 36

தாய்மாமன்!
மடியில
ஒக்கார வெச்சு
காதுகுத்தி
குத்தவெச்ச நாளில்
பச்சை ஓலை
தட்டிகட்டி
மொதமொதலா
நாங்கட்டும்
தாவணிக்கு...
எனக்கு புடிச்ச
கிளிப்பச்சை
நிறம் பாத்து
காரைக்குடி பட்டெடுத்து
பொருத்தமா எல்லாம்
எனக்கு செஞ்ச
தாய்மாமன் சாதகம்
எனக்கு
பொருந்தாம போனதால
பத்து பொருத்தம் பார்த்து
பக்கத்து ஊருக்கு
வாக்கப்பட்டேன்....
ஒத்தப்புள்ள பெத்ததுமே
ஒத்துவாழ முடியாதுன்னு
கட்டிப்போனவன்
வெட்டிவிட்டான்
அன்னைக்கி
சாதகம் பொருந்தல
இன்னைக்கி
சார்ந்தவன் பொருந்தல!
இருந்தாலும்,
வாக்கப்பட்டு போகையில
வாஞ்சையோடு
தாய்மான்
வாங்கிவிட்ட மயிலப்பசு
நெறம்மாச செனையா
நிக்குதடி எனக்காக
சொச்சகாலத்த
மாமன் தந்த
மாட்ட நம்பி
ஓட்டணுமே வாழ்க்கையை...
நாய் நரியா பொறந்தாலும்
தாய்மாமன் தொன வேணும்
மிராசா இருந்தாலும்
அந்நியன நம்பாதே
தருசா கிடந்தாலும்
தாய்மாமன் பெருசப்போய்!

எழுதியவர் : (18-Jan-14, 4:23 pm)
பார்வை : 79

மேலே