தூக்கம் கலைi என்னை அழைi 0தாரகை0
விலையில்லா என்னன்பு இலக்கியமே!
விளித்திட்டால் அடைவேனே புளகாங்கிதமே!
வலியின் கீற்று எனை வாட்டியதே!
விழியின் துயில் கலைந்தால் சோபனமே!
நிலத்தில் பட்டுத் தெறிக்கும் நிலவொளிபோல்-உன் அகத்தில் அழைக்கும் எண்ணம் வாராதா?
செத்துப்போன அலைபேசி சினுங்காதா?-என்
மொத்தமான அவஸ்தைகள் சொல்லாதா?
சலசலக்கும் பட்டின் அசைவொலிபோல்
கலகலவென கைபேசி குலுங்காதோ?
கணப்பொழுதில் வெட்டி மறையும் மின்னல்போல்
காலம்தான் விரைவாக ஓடாதோ?
கதிரவனின் வெப்பத்தால் காய்ந்து வாடும்
கமலமாய் ஆனேனே இன்று நானும்.
அதிராத அலைபேசி கண்டு நானும்
அஹிம்சையாய் இம்சித்து போகிறேனே!
ஆசையாய் நான் அனுப்பும் தூதுகளை
மாசில்லா உன் கருவிழிகள் காணாதோ?
சாயத்தொட்டி ஆவியில் வெந்தேனே!
சாயும்காலம் வந்தால்தான் எழுவாயோ?
காதல் கவிதைகளை பேசி மகிழாமல்
கருப்பாதை காரிருட்டில் கழித்தேனே!
நீண்ட நிழல்கள் நிலத்தின்மேல் வீழ்வதுபோல்
மாண்டவளை உயிர்ப்பிக்க மழைத்துளியாய் விழுவாயா?
அரைநொடிக்கி ஒருமுறை அவாவினேனே!
அழைப்பாயா அழைப்பாயா என ஏங்கினேனே!
அவசரத்தால் முகம் சிவந்து பிழம்பானேன்!
அணைக்க வந்த கண்ணீரால் குளமானேன்!
நான் படும் பாட்டை அறிவாயோ?
நாடி துடிப்பில் விரல் அமர்த்தி பிடிப்பாயோ?
சத்தியமாய் நித்திரையை கலைத்துவிட்டு
பத்திரமாய் மாத்திரையை தந்து விடு!
பிரிவென்னும் பிணியில் வாடும் பைங்கிளி நான்.
பிரியா வரம் தராமல் மறுப்பதும் ஏன்?
கூரிய விழிகளில் நீ ஆழமாய் பார்த்திடு-நான்
கூறிய வரிகளின் ஆழத்தை அறிந்திடு!
உயிரை இறுக்கி பிடித்து
உருண்டு சுருண்டு படுத்து
உணர்வோடு ஊடல் கொண்டு
உறங்குகிறேன் மனம் விழித்து!
மரித்தேனா? விழிப்பேனா? அறியேனே?
மரணித்தால் அப்போது வருவாயோ?
மறக்கவில்லை உனையென சொல்வாயா?
மறந்ததற்கு விளக்கம் ஏதும் தருவாயோ?
எத்தனைதான் கவி வேண்டும் சொல்லிவிடு
தமிழ் வற்றாது,கவலை இல்லை தந்திடுவேன்
தூக்கம் கொஞ்சம் கலைப்பாயோ?
அலைபேசியில் எனை அழைப்பாயோ?