துயரிரவு
கருமையப்பிய
அடர் இருள்
கருங்காடாய் விடிகின்றன
நீயில்லா என் அதிகாலைகள் !
ஆதவச் சேவகர்கள்
செங்குழம்புப் பிளம்படிக்கும்
கீழை வானச் சிவப்பாகி
செங்காந்தள் மலரென
காந்தலோடும் சிவந்தும்
கிடக்கின்றன
என் விழிகள் !
பெயர் தெரியாத ஏதோ
ஓர் பறவை
நீயில்லாதது தெரிந்து
என் கணங்களை
கொத்திச் சென்று
திரும்ப வந்து என் மேல்
யுகங்களை உமிழ்ந்து
விட்டுச் செல்கிறது !
நீயின்றி யுகங்கடப்பது
தெரியாமல்
வெறுமையில் பதிந்து கிடக்கும்
என்
காத்திருப்பின் வேர்கள்
என்னுள் பற்றியெரிகிறது !
இரவெல்லாம் இமை மூடா
உன் வதன நோக்கில்
தூங்கா விளக்காய்
துடிதெரிந்தது அறியாது
சன்னலோர பயணத்தில்
என் காதோர ரோமம் பற்றி
மென் காற்று கிசுகிசுக்கும்
இமைகளின் சோர்வு பற்றி !
உன்னை விட்டு
ஊர முடியாத
என் நினைவுகளைப்போல -
மரித்துக் கறுத்த
பெரும் சர்ப்பமென
நீண்டு நெடுதாகி
வளைந்தும் .நெளிந்தும்
கவனிப்பாரற்று கிடக்கிறது
நடு நிசி நெடுஞ்சாலை !
பெரும் புழுக்கத்துடன்
முள்ளென இதயம் கிழிக்கும்
காற்றற்ற இரவுகளில்
ரோஜாக்களின் இதழ்களில்
வியர்வை முத்துக்கள்
கொட்டிக்கிடக்கின்றன !
முழு சுவாச மற்று திணறுகிறது
உன்னை சுமந்த படி
சுக பாரமிழுக்குமென் இதயம் !
என் ஒவ்வொரு கிளைகளிலும்
நெளியும் உன் நினைவு
ஒரு மர்ம மண்புழுவென
என் இரவுகளில் நெளிந்து
என்னைத் தின்று தீர்க்கிறது !
கலி தீர்க்க நீ வரும்
விடியலுக்காக ஏங்கி
நதியின் மீது கடிகாரங்களென
நகர்கின்றன
உன் துணையற்ற
என் துயரிரவுகள் !