ஞானமடா நீயெனக்கு 2
கையசைத்துவிட்டு
பள்ளிக்கு செல்கிறாய்,
எனக்கென்னவோ
நான் தான் உனை விட்டுப்
பிரிவது போல் வலி,
நீ - குதூகலத்தோடு
ஓடிவந்து -
எனக்கொரு முத்தமிட்டு விட்டு
புதியதாய் ஒரு
சுதந்திரம் கிடைத்தாற்போல்
ஓடுகிறாய்
எது உனக்கு
சந்தோஷம்?
எனைவிட்டுப் பிரிந்திருப்பதா
இல்லை,
யாருமே உனை கண்டித்திராத ஒரு
உலகமா?!!
நானும் நீயும்
அடித்து அடித்து
விளையாடுகிறோம்,
நீ எனக்கு
வலிக்கும்வரை அடிக்கிறாய்..,
நான் -
எங்கு உனக்கு வலித்துவிடுமோ என
அடிப்பது போல்
பாவனை செய்கிறேன்!
எல்லாமே -
களைந்து கிடக்கும்
வீடு,
மடித்து வைத்திடாத
துணிகள்,
இங்குமங்குமாய் சிதறிய
தின்பண்டம்,
வீட்டிற்கு வரும்
விருந்தாளிகளுக்கு -
தெரியுமாத் தெரியவில்லை
இது -
நீயிருக்கும் வீடென்று!
எச்சில் -
ஒழுக ஒழுக
எனைக் குடிக்கிறாய்,
உடம்பெல்லாம் ஏறி மிதித்து
கன்னம் கீறி
மூக்கை கடித்து
தலைமுடி பிடித்திழுத்து
உதட்டை கிள்ளி
அப்பப்பா...
உனை என்ன செய்கிறேன் பாரென்று வந்த
கோபத்தை -
ஒரேயொரு முத்தத்தில்
ஒத்திஎடுக்கிறாய்.
நான் கொஞ்சம் சிரிக்கையில்
மீண்டும் - நீ
கிள்ளி கீறி எனை ஏறி மிதிக்க
நீள்கிறது - உனக்கும் எனக்குமிடையே
ஒரு -
முத்தத்திற்கான போர்!
இப்பொழுதெல்லாம் நீ
நன்றாகவே நடக்கிறாய்,
இருந்தும் -
சந்தைக்கு செல்கையில்
வீடு வருகையில்
வெளியே செல்கையில்
உனை தூக்கிக்கொண்டே
நடக்கிறேன்,
நீ கனத்தாலும்
உனை சுமப்பதில்
எனக்கொரு ஆசை;
சொர்க்கத்தை சுமப்பது
இப்படித் தான் -
சுகம் போல்!
தியானம் செய்கையில்
மடிமீது வந்து
அமர்ந்து கொள்கிறாய்,
சாமி கும்பிடுகையில்
நானுனை -
தூக்கிக் கொள்கிறேன்.
இடையே -
நீ என் மூக்கை பிடித்து
விளையாடுவாய்..
காதை நோண்டி சிரிப்பாய்..
கைதட்டி என் காதோரம் கத்துவாய்..
எனக்கு -
உள்ளே நான் வணங்கும் கடவுள்
வெளியே -
என்னோடிருப்பதாய் இருக்கும்!
அன்பும் கண்டிப்பும்
குழந்தைக்கு -
ஒருசேர வேண்டுமென
அவ்வபொழுதுனை கண்டிக்கிறேன்,
நீயோ... ஒரு -
சின்ன அதட்டலில்
மிரண்டு போகிறாய்,
அடித்து விடுவேனோ
என பயந்து ஒடுங்குகிறாய்,
உனக்கான என் கோபம்
உனக்காகத் தான் என்றாலும்
அதத்தனைக்காகவும் எனை
மன்னிப்பாயா?