மொக்குகள்
என்னறைக்கு வந்துபோயிருக்கிறாய் நீ.
கடைசியாக வந்தபோது
(அப்படித்தான் ஆகிவிட்டதே)
உன் இதழ்களில் எப்போதுமிருக்கும் பூவொன்றைக் காணவில்லை.
_
என் கண்கள் உயிர் வேட்கையில் தவிக்கிற
புறா மாதிரி. பறந்தலைந்து கொண்டிருந்ததைக்
கவனிக்காத மாதிரி வேறு இருந்தாய்....
_
வார்த்தைகள் ஏதாவது சொன்னால் அர்த்தங்களைத் தேடுவேனென்று
நினைத்தாயோ என்னவோ?
(என்னைப் பற்றித்தான்
தெரியுமே உனக்கு)
_
ஓரமாக என்னுடைய
மேசையில் சாய்ந்தபடி சடையை முன்புறம் போட்டுக் கொண்டு சூட்டியிருந்த மல்லிகைச் சரத்தை
ஒவ்வொன்றாய் பிய்த்தெறிந்து கொண்டே குழப்பங்களை விட்டுச்சென்றாய்....
_
எல்லாவற்றையும் சேகரித்து வைத்திருக்கிறேன். எனது மேசையின் மேல் எல்லாமே மொக்குகள்....
_
பார்க்கிறபோதெல்லாம், அவை
பூக்காமலேயே போய்விட்ட
சோகத்தைத் தாங்க முடியவில்லை எனக்கு....