சொற்களைத்தேடி அகன்
சொற்களை மெளனக்குழி வெட்டி
அவன் புதைத்து மரித்தான் .....
பொதுவுடைமை விடியலில்
பூபாள சிதறல்களாய்
எழுச்சி கீதங்களில் அன்று ஒலித்தன ...
இன்றோ..
தேசியப் புரட்டல்களில்
தலையாட்டொலி சப்தங்களாயின
அன்றைய சொற்கள்...
சொற்களை மெளனக்குழி வெட்டி
அவன் புதைத்து மரித்தான்....
மண்விடுதலைக்கான
வெளிச்சப் பாதைகளின்
மைல் கற்களாய் அன்று திகழ்ந்தன ...
இன்றோ..
இனப்படுகொலை கயவர்களின்
புட்டத்து தேமல் படையாகிப்
பரவி விட்டன அன்றைய சொற்கள்..
சொற்களை மெளனக்குழி வெட்டி
அவன் புதைத்து மரித்தான்....
நடு நிலைமை நாட்டாண்மைகளின்
நாவசை நியாங்களாய் அன்று மொழிந்தன
இன்றோ..
ஒட்டுக்கும் பதவிக்கும் விலை போகும்
பரிவர்த்தனை பண்டமாகின
அன்றைய சொற்கள்...
சொற்களை மெளனக்குழி வெட்டி
அவன் புதைத்து மரித்தான்...
கால மாற்றத்தில்
கலவரங்கள் முகிழ்ந்தன
சொல்லிட எழுதிட சொற்களைத் தேடி
சிறுவர் கூட்டம் ....!!!