- கருத்திலே பூத்தது வேகண்ணனைப் பாராட்டி

இது யாரையும் புண்படுத்த எழுதப்படவில்லை. பல சமயங்களில் பிறருடைய நல்ல கவிதை வரிகள் நம்முள் எழுதிப் பார்க்க ஒரு உந்துதலை ஏற்படுத்துவன என்பதற்கு ஒரு சாட்சியாகவே இது இங்கு பதியப்படுகிறது.

இனி கவிதை:
==== கிசுகிசுப்பும் ஓய்ந்துவிடும் !====
கண்ணே!உன் விழிஈரம்
கார்காலம் கூட்டுதடி!
கருத்தமேக நீர்கீழே
காணுமுனர் வருவேண்டி!
பெண்ணே!உன் ஆசையதும்
பெருவானில் மின்னுதடி!
பேச்சரவம் எனக்குள்ளும்
கீச்சொலியாய்க் கேட்குதடி!

காட்டுள்ளே குயிலழுது
கரைவதுவும் கேட்டுதடி!
கூட்டைவிட்டு வந்தனெஞ்சம்
கூவுவதாய் எண்ணுறேண்டி!
நோட்டமிட்டு நிற்பவர்கள்
நோண்டியுனைக் கேட்பதெலாம்
சாட்டையடி இடியினிலே
சாரலுடன் கேட்குதடி!

பச்ச மரமுன்னைப்
பத்தி எரிந்திடவே
வச்சு வந்தவனும்
வாடாமல் இருப்பேனோ?
குச்சு பெருசாகிக்
கூடவுள்ள சொந்தமெல்லாம்
மெச்சும் படியுன்னை
மேலாக்கிக் காட்டுவேண்டி!

கிண்டல் அடங்கிவிடும்;
கிசுகிசுப்பும் ஓய்ந்துவிடும்;
வண்டல் கொண்டுவரும்
வற்றாத நதிபோல
அண்டி வரும்போதே
அலுக்காமல் நீ,உனது
தண்டல் வேலைசெய்யத்
தடைபோடேன்,தாமரையே!
=======
வே கண்ணனின் பாட்டுக்கு [174034] எதிர்ப்பாட்டாக எழுதப்பட்டது இப்பாடல்;
அந்தக் கவிதையை எழுதி இந்த உந்துதலை எனக்குள் ஏற்படுத்திய -வே.கண்ணன் அவர்களுக்கு எனது பாராட்டுகளை மட்டுமல்ல நன்றியினையும் சமர்ப்பிக்கின்றேன்.
==== ======

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (26-Jan-14, 6:15 pm)
பார்வை : 88

மேலே