அதோ எங்கள் மீசைக்காரன்

அதோ எங்கள் மீசைக்காரன்
நாணத்தை நாய்கள் என்றவன்
அச்சத்தை அடியோடு வெறுத்தவன்
ஆண்மையின் மிடுக்கை
நொடியில்
கவியால் சரித்தவன்
அதோ எங்கள் மீசைக்காரன்.

என்னடா மானுடா
மறந்திலையோ உந்தன்
மடமைகளை என்று
வினாத் தொடுத்தவன்
அதோ எங்கள் மீசைக்காரன்.

பெண்மையை மென்மையாய்
பாடியவன்
பெண்ணுள்ள உணர்வை
உள்ளத்தே கொண்டவன்
திமிராய் அலையும்
திங்களையும்
தன் கவிக்கு காவல் நிற்க
சொன்னவன்
மிடுக்காய் திரியும் தென்றலையும்
பெண்மைக்கு துணையாய்
நிற்க சொன்னவன்
பாஞ்சாலி சபதத்தையும்
கவியால் காவியமாக்கியவன்
குயிலின் பாட்டையும்
ஒலி வடிவில் உரு மாற்றியவன்
அதோ எங்கள் மீசைக்காரன்.

சிறு நூலை சில மந்திரம்
சொல்லி அணிந்தால்
நீர் பெரியவனோ
என்றவன்
சிறு பிள்ளைக்கும் ஒற்றுமை
உயர்வை
சொல்லித் தந்தவன்
அடுப்பங்கரையில் வாழும்
எங்களையும்
சட்டம் படைக்க சொன்னவன்
வீராப்பு பேசித் திரியும்
ஆண்மைக்கும் பெண்மை
சரிநிகராம் என்று
சொல்லி சென்றவன்
அதோ எங்கள் மீசைக்காரன்.

நான்மணி மாலையையும்
நாசூக்காய் எழுதியவன்
பேசும் பெண்மை, சிவசக்தியடா
என்றவன்
அக்கினிக் குஞ்சை
கவிக்காட்டில் வைத்து
கவித் தீயை கொழுத்திவிட்டவன்
தாச மார்க்கத்தை தகர்த்து
எறிந்தவன்
தனிமை இரக்கத்தை
ஆதியாய் செய்தவன்
ஆண்டவனுக்கும் நீதி
உரைத்தவன்
ஆள்பவனுக்கும் அப்போ
சவுக்கடி கொடுத்தவன்
தேசிய இயக்கத்தில்
தேசத்தைக் காத்தவன்
ஆங்கிலேயனயும் கவிச்சிறையில்
அடைத்து
பாரத மாதாவுக்கே
பள்ளியெழுச்சி பாடியவன்
அதோ எங்கள் மீசைக்காரன்.

எழுதியவர் : காயத்திரி (29-Jan-14, 12:52 pm)
பார்வை : 88

மேலே