நண்பன் ரவீந்திரனுக்கு பிரிவு உபசார மடல்
நண்பன் ரவீந்திரனுக்கு பிரிவு உபசார மடல்......
============================================
பணியிடத்தில் பிரிவு...
இது நட்பின் பிரிவல்ல...
தற்காலிகப் பிரிவு - எனினும்
தாங்கவில்லை இதயம்...
ஆறுதல் கூறியும்
ஆசனமிடுகிறது
இதயத்தில் துக்கம்!!!
நெடிது காலம்
நலமுடன் வாழ்வாய்
உன்போல் உயர் வாழ்வு
எவரும் கண்டிலர் என்று
அனைவரும் வியந்திடவே!!!
வாய் வாழ்த்தினாலும்
இதயத்தில் துன்பம்
ஈட்டி எய்கிறது...
"இதோ கூப்பிடு தூரத்தில் ரவி"
என்று எட்டிப் பார்த்தது போய்
இனி
எங்கே இருக்கிறாய்??
என்ற தேடலாய்....
உன் பிரிவினில்
பிரிக்க இயலாத துயர்!!!
வாழ்க்கை வலைப் பின்னல்களில்
நீ சிக்கித் திணறிய காலங்கள்
இன்று நினைப்பினும்
என் விழிகளில்
ஊசியாய் தைக்கும் கண்ணீர்....
வலையை அறுத்தெரியவில்லை
பின்னல்களை விடுவித்தாய்
பக்குவமாய்...
பெருமை கொள்கிறேன் நண்பா
உன் பொறுமை கண்டு....
உன் திருமதிக்கு உறுதுணையாய்
அன்பாய்... ஆதரவாய்...
நீ ஆற்றிய பணிவிடைகளில்
அவளுள்
புரையோடிய புற்றுநோயும்
சுவடின்றி காணாதொழிந்த
சூசகம் கண்டேன்
உன் தூய அன்பினில்...
இன்முக பராமரிப்பினில்....
எத்தனை சோதனைகளைக் கடந்தாய்???
கர்த்தரின் அருளால்
இனி எல்லாம் சாதனைகளாய்.....
உன் வளர்ச்சிக்கு
இனி மணிமகுடங்கள்...
என் விழி கண்டு
மகிழ்ச்சி கொள்ளும்
விழாக் காணும்
உன் வாழ்நாளும்....
நாசி தொட்டு
வழிந்தோடிய கண்ணீர்
இனி துளிர்க்கட்டும்
உன் விழிகளின் விளிம்பினில்....
ஆனந்தக் கண்ணீர்
உன் வசமாய்
இனி என்றென்றும்....
அன்புடன்,
தோழி
சொ. சாந்தி