கருகும் கண்ணீர்
கும்பகோண சந்தையிலே.. ஓடு கூரை வீட்டினிலே..
ராசாத்தி-கருப்பனுக்கு ஒத்தையா பொறந்த மவ..
நாலெழுத்து படிச்சதில்ல விவரமெதும் தெரிஞ்சுக்கல..
ஆத்தா அப்பன் சொன்னாங்கனு ..
பதினாலே வயசிலதான்.. மாடசாமி மாமனுக்கு பொஞ்சாதியா ஆனேனே...
பொழுதுக்கும் சண்ட..பொழுது போனா தண்ணின்னு,
உருபடாத புருஷன்தான்..
எட்டே மாசத்துல எட்டாத தூரம் போனான் ..
கையிலே தான் ஒத்த உசிரு,
சுகபட்டே வாழனும்னு ஊரெல்லாம் தேடி வெச்சேன்
'ஊர்வசி' னு பேரு..
கூலி வேலை:வீடு வேலை;கெடைச்ச வேலை செஞ்சுதான் நாலு காசு சேத்தேனே..
செல்லம் தந்தா ராணி மவ உருபடாம போகுமுன்னு
வேகம் காட்டி வளத்தேனே..
ரெண்டாவது படிக்கையிலே
கலெக்டர் தான் என் மவனு சொப்பனமும் கண்டேனே..
தாளிக்கும் நேரத்துல தீ பொறி பட்டதுன்னு துடிதுடிச்சு போன மவ
அழுதுகிட்டே நின்னாளே.. மனசுக்குள்ள படபடத்தேன் ..
அவ படிப்ப நெனச்சு அத மறச்சேன்...
முட்ட கண்ணாலதான் இன்னும் முழிச்சு முழிச்சு
விரட்டியும் விட்டேன் நான்…
ரெண்டு மணி நேரம் தான் அவள அனுப்பி ஆகல..
என் கனவாக பொறந்த மவ உருவத்தையும் காணல...
தீ பொறி பட்டதுன்னு துடி துடிச்சு அழுதவள,
தீக்குளமொன்னு வந்தே முழுங்கி போச்சுதுவே ...
பாவி மவனு என்னையும் தான் சபிச்சுகிட்டே போனாளோ...?
தீ பார்த்த நேரம் அவ எத நெனச்சு பாத்தாளோ..?
சொட்டு சொட்டா உசிர விட்ட கண்மணிதான் துடிச்சாளோ..?
பாவி நானும் இங்கிருக்க அவ தெய்வமாகி போனாளோ..?
போவலன்னு சொன்ன கண்ணை நா தானே அனுப்பி வெச்சேன்..
தீ கொண்டு போகுமுன்னு தெரிஞ்சா நான் விரட்டி விட்டேன்..?
பிணந்தின்னி நெருப்புதான் உசுரோட உரசிடுச்சோ..?
சுடுகாட்டில் பிணமொன்னும் கெடையாம பசிதான் எடுத்துடுச்சோ..?
பூவென்னும் அறியாம மொட்டெல்லாம் கொளுத்திடுச்சோ..?
தப்பொன்னு நடந்துடுச்சு குத்தமென்னு யார சொல்ல..?
கண்ணகியா மாறி நானும் நெருப்பால எத சுட...?
கனவெல்லாம் காணாம எதோ-னு விட்டிருந்தா, என் மகளாதான் வாழ்ந்திருப்பா...!
கனவெல்லாம் சேத்து வெச்சேன்.. அழகு உசிர விலைகொடுத்தேன்...
மகளா இருந்தவள நான் மண்ணாக்கி போட்டேனே...!!
இனி வேறொன்னும் இல்லை..
வாழ்நாளெல்லாம் என் கண்ணீர் என்னை கருக்கிடுமே!!