அணுவாற்றல் வேண்டாம் அகற்று

மின்சாரத் தேவைக்காய் மேற்கின் அடிவீழ்தல்
தன்மானப் போக்கோ? தகுமோதான்? –நன்காய்ந்(து)
உணர்ந்திவ்வொப் பந்தம் உதவா(து) எனத்தேர்ந்(து)
அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

நம்பி அவருறவை நாமேற்றுப் பிந்நாளில்
வெம்பி விழுவதுவும் வேண்டாமே! –தெம்பால்
திணவெடுத்த தோளர்தம் தீயுறவுக்(கு) அஞ்சி
அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனவானால்
இல்லானின் சொல்லோ எடுபடும்? –வல்லான்
பிணக்கின் இலார்க்குப் பெருந்துயரே மிஞ்சும்
அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

மேற்கு கிழக்கென்று மேதினியைத் துண்டாக்கி
மேற்கு கிழக்காள விட்டுவிட்டோம் –மேற்கை
இனியும்நாம் நம்பும் இழிநிலை ஏனோ?
அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

எழுதியவர் : அகரம் அமுதன் (2-Feb-14, 8:44 am)
பார்வை : 68

மேலே