கால்களில் கிடக்கும் உலகம்
உழைப்பவன் வயிறோ ஒட்டி இருக்குது
==உணவுகள் எங்கோ கொட்டிக் கிடக்குது
உழைப்பினை உலகம் உறிஞ்சிக் குடிக்குது
==உரிமையைக் கேட்டால் தட்டிக் கழிக்குது
குடிசையின் அடுப்பில் பூனை தூங்குது.
==குறுமணிக் காண பானை ஏங்குது
மிடியதன் கொடுமை நாளும் ஓங்குது
==மிரட்டிடும் வாழ்வோ மூச்சு வாங்குது.
பொருட்களின் விலையோ வானை முட்டுது
==பொருளா தாரமோ தேளாய் கொட்டுது
இருப்பதை இழந்து இதயம் துடிக்குது
==இருளினில் விழுந்த உதயம் தவிக்குது.
ஒருசிலர் வாழ கூட்டம் கூடுது
==ஒத்து ஊதியே பாட்டும் பாடுது
திருமுகம் காணவும் தேடி ஓடுது
==தெய்வமாய் அவரை தூக்கி நிறுத்துது.
நெய்தவன் இடைநிர் வாணம் காணவோ
==நேர்மை அற்றவன் பட்டு உடுத்தவோ
செய்தவன் பிழையை மாற்றி வைக்கவே
==சேர்ந்திட வேண்டும் உழைக்கும் கரங்களே..
வியர்வை சிந்தியும் வெற்றி இன்றியே
==விழியில் நீருடன் மாண்டு மடிவதோ?
உயர்வை காணவே திரண்டு எழுந்திடின்
==உங்கள் கால்களில் உலகம் கிடக்குமே!