கட்டுரைக் கதை பிரசவம்
கட்டுரைக் கதை
பிரசவம்
தமிழ் இலக்கியத்தில் இத்தகு யுக்தி கையாளப்பட்டிருக்கிறதோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் நான் முயல்கிறேன். அதாவது ஒரு கருவைக் கொண்டு கட்டுரையும் கதையும் கவிதையுமாக ஒரு கதம்பமாக படைப்பது.
தமிழக மக்களின் வாழ்க்கை திருவிழாக்கள் கொண்டாட்டங்களால் நிரப்பப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிகழ்வும் உணர்ச்சிகளின் ஓலத்தாலும், சந்தோசத்தின் வெளிச்சத்தாலும் பின்னப்பட்டவைதான். நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகளாக மாறிப் போன பின்பும் எதையும் விட்டுக் கொடுக்கச் சம்மதிக்கவில்லை நம் தமிழ்ச் சமுதாயம். கலாச்சாரப் புணர்வுகள் இலை கிளை தண்டு எனப் பரவி நின்ற போதும் ஆணி வேரைப் பிடித்து நிற்கும் மண் என்னவோ அதன் இயல்பை மாற்றிக்கொள்ள மறுத்து வருகிறது என்பதுதான் உண்மை.
அதனடிப்படையில் ஒரு படைப்பு முயற்சி
பிரசவம்
அது தேர்தல் காலம், நல்ல மழை, இடியும் மின்னலுமாக வானத்தை மறைத்துக் கிடந்தன மழை மேகங்கள். தெருவெங்கும் குளத்து நீர் கடலாய் விரிந்து கிடக்க அயிரை மீன்கள் அவைகளாகவே வீட்டிற்குள் வந்து சமையலுக்கு உதவி செய்துகொண்டிருந்தன. முத்தம்மா கிழவியின் கை பட்டு மீன் கொதித்தால் கொதித்த மீனுக்கே எச்சில் ஊறும்.
பசுஞ் சானம் போட்டு மெழுகிய மண் தரை. கம்பிக்கோலம். நடுவே எட்டுப் புள்ளிக்கோலம். அதுவும் அன்னியப் படையெடுப்பின் எச்சம் போல் அழிந்து கிடந்தது, காரணம் அதற்கு மேலே தான் தொட்டில் கட்டப்பட்டிருந்தது. கூரை வீட்டின் மூங்கில் வலையிலிருந்து (குறுக்குக் கம்பு) அவனுக்காகவே புதிய நூல் கயிறில் ஆடிக்கொண்டிருந்தது தொட்டில். இல்லையென்றால் சேலை தான் கயிறும் தொட்டிலுமாயிருந்திருக்கும் . பிறந்த்து ஆண் பிள்ளையாயிற்றே !அவனது அப்பா அக்காலத்து ரெண்டாம் வகுப்பில் முதல் மாணவன். கேட்கவா வேண்டும் அலப்பரைக்கு. பிறந்த தேதியைக் குறித்து வைக்கும் விழிப்புணர்வு அவருக்கிருந்தது.
ஆம் ,மாசி மாசம் வெள்ளீக் கிழமை இரவு ஏழு மணிக்கு என்று ஒரு சாணி பேப்பரில் எழுதி வைத்து விட்டார் . பிற்காலத்தில் அதைக் கொண்டு ஜாதகம் எழுதமுடியாமல் திணறிப் போனார் சோதிடர், அது வேறு கதை.
யாராவது கேட்டால் அம்மா சொல்வாள், அவன் மகாலிங்கம் ஒட்டை, (SAME DATE) .அவனும் மகாலிங்கமும் ஒரே நாள் ஜனித்தவர்களாம். அம்மாவின் கணக்கு. இருக்கட்டும்.
ஊருக்குள்ளே இதுவும் ரெட்டை பிள்ளைனு தான் பேச்சு இருந்தது. காரணம் அம்மாவின் வயிறு வழக்கத்திற்கு மாறக பெரிதாய் இருந்தது மட்டுமல்ல முந்தைய மூன்று பிரசவங்களும் ரெட்டைப் பிள்ளையாய் பிறந்த்து தான் காரணம்.
அடாத மழையில வெள்ளிப் பத்தாயமா பெத்துருக்கா குருவம்மா, வச்சுரிச்சு பிராமனப் பய மாதிரில்ல இருக்கு பய புல்ல. இது ஊரார் அளித்த சான்று,
அப்பன் கருவாயன் ,குள்ளன் புள்ள பாரு, எப்புடிப் பொறந்துருக்குனு இப்படியும் சில சான்றுகள்.
வேலை முடித்து வியர்வை வாசத்தோடு ஊரே வந்து பார்த்தபோது அவனோ உறங்கிக்கொண்டும் சிரித்துக் கொண்டுமிருந்தான்.
“வானத்துப் பந்தல் விட்டு
வழுக்கி விழுந்த சுரைப் பழமோ ?
கோதுமை மாவுல
குருவம்மா அவிச்சு வச்ச
கொழுக்கட்டையோ ?
முனியாண்டி பார்வையில
முழுசாப் பொறந்தானா /
எனக்குப் பொறந்தவண்டி
என்னப் போல வளர்வான் பாரு”
அவன் அப்பா இப்படி ஒரு புதுக் கவிதை மனதுக்குள் எழுதியிருக்க வேண்டும் .ஆனால் அந்தளவுக்கு கவித்துவம் அவருக்கில்லை. ஊரார் பாராட்டு குருவம்மாவுக்கு உள்ளூர ஒரு சந்தோசம் கொடுத்தாலும் புள்ள செக்கச் செவேருன்னு வேர பொறந்ததுல அவளுக்கு ஒரு பயம் இருக்கத்தான் செய்தது. பாஞ்சாலிக் கிழவி வந்து ஒரு வார்த்தை சொன்னாள். பய புள்ள மூக்கும் முழியும் அப்பனப் போல ஆனா நெரம் ஒன்னப் போல குருவம்மா மஞ்சனத்தேரா இருக்கான். பொம்பலப் புள்ளயா பொறந்திருந்தா புருஷன் கெடைக்காதுடி.
கொஞ்சம் ஆறுதலா இருந்தது குருவம்மாளுக்கு. ஆத்தா நெரமும் புள்ளைக்கி வருமா ? னு அவ கேக்கல. சமாதானமாகிக்கொண்டாள்.
சேனை வைக்கனும். ஆள் தேடுகிறாள். முத்தம்மா கிழவி. லட்சுமிக் கிழவியை பரிந்துரை செய்தாள் குருவம்மாள்.
“போடி பொச கெட்டவளே, அவ உன்னிச் செருமினா ஓடி ஒழிவா பயந்தாங்கொள்ளி அவளப் போயி”
தொடர்கிறாள்.
எம் பேரன் முழிக்கு முன்னூரு பொண்டாட்டி, நடைக்கு நானூறு பொண்டாட்டி இருந்தா இருநூறு பொண்டாட்டி படுத்தா பத்தாயிரம் பொண்டாட்டி டி. யாரு சேனை வைக்கிறது. போ எம் மச்சானக் கூட்டிக்கிட்டு வா”
ஒரு வழியாக சேனை வைத்தாகிவிட்ட்து. வைத்தவர் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். ஆனால் அவருக்கு அத்தனை பொண்டாட்டிகள் இருக்கிறார்களா என்ற விபரம் தெரியவில்லை
சேனை என்பது சர்க்கரை தண்ணீர். ஆம் பிறந்த குழந்தை தாய்ப்பால் குடிக்குமுன்னே ஊட்டப்படும் சுவை நீர். அதை யார் தொட்டு பிள்ளையின் நாக்கில் வைக்கிறார்களோ அவர்கள் குணத்தையொற்றிப் பிள்ளை வளரும் என்பது தென் மாவட்டத்து நம்பிக்கை..
அடுத்ததாக பேர் வைக்கும் படலம் .திமுக உருவான நேரம் அவன் தந்தை அரசியல் கொஞ்சம் தெரிந்தவர். அவருக்குப் பிடித்த தலைவர்கள் பெயரை அவர் தேடிக்கொண்டிருந்த சமயம் முத்தம்மா கிழவி பேரை முடிவு செய்திருந்தாள். அம்மாவை “யாத்தே” என்றழைப்பது அச்சாதி வழக்கம். அவனது அம்மா குருவம்மா “யாத்தே அந்தச் சாமி பேரு வச்சுட்டியா ? அந்த மனுஷன் என்ன சொல்வாறோ? என்றாள்.
“ போடி பேப்பய மவளே, நான் வெறும் வயித்துல வச்ச பேருடி, காயும் கனியுமா எத்தனயப் பறி குடுத்துருக்கேன் அவனுக்கு என்ன தெரியும், சாமி இல்ல ம்பான், பேரு வைக்கேனு சொன்னப்புறம் தான உனக்கு முட்டு நின்னுச்சு (CONCEVE) . இத அவன் நம்பமாட்டான் .கெடக்கான் .
குருவம்மாள் புருஷன் முத்தம்மாளுக்கு அண்ணன் மகன் என்பதால் கொஞ்சம் உரிமையில் பேசுவாள் ஏசுவாள்.
சுக்கு ,மிளகு, திப்பிலி கலந்த பேறுகால மருந்து சரக்கு நாடார் கடையில் கடனுக்கு வாங்கி தயார் செய்து வைத்திருந்தாள். வீடே மருந்து வாசம் தான் . மேலும் நெத்திலி கருவாட்டுக்கு பால் நல்லா சுரக்குமாம் அந்த வீச்சம் வேறு. அந்த சின்ன வீட்டுக்குள்ளெ புதுப்பிறவி அவனும் இத்தனை சுகந்தங்களயும் மூக்கை பொத்திக்கொள்ளாமல் அனுமதித்து இருந்தான்.
பேர்காலம் பார்த்த மருத்துவச்சி வெள்ளையம்மா மிகப் பிரபலம். ஆம், கொழந்த பொறண்டு கிடந்தாலும் மால சுத்திப் பொறந்தாலும் கை போட்டு சுளுவா வெளியா எடுத்து தருவா. மனுஷங்களுக்கு மட்டுமில்ல. ஆடு மாடு நு எல்லாத்துக்கும் அவள் தான் மருத்துவம்.. அவளுக்கு தினமும் சோளக்கஞ்சி அல்லது கம்மங்கஞ்சி ஆத்தா கொடுத்தாலும் அந்தத் தெருவில வெள்ளையம்மாளுக்கு எப்புடியும் ஒரு வீட்டுலயாவது அரிசிச் சோறு இல்லைனா குருனைச் சோறாவது கண்டிப்பாகக் கிடைக்கும். அவள் தினமும் வந்து பார்த்துக் கொண்டாள்.
குருவம்மாளுக்கு மாலை சுற்றித்தான் பிறந்தான் அவன். தாய் மாமனுக்கு ஆகாதாம். அதனால் வெள்ளையம்மாள் யோசனைப்படி பிள்ளையை சொளவில் (முறத்தில்) போட்டு தாய் மாமன் மார் மூன்று முறை புடைத்து தூ தூ என முகத்தில் துப்ப வேண்டுமாம். அப்படித் துப்பி விட்டார்கள். தோஷம் கழிந்து விட்டதாக வெள்ளையம்மாள் உறுதியளித்தாள்.
மாலை சுற்றிப் பிறத்தல் என்பது வேறொன்றுமில்லை. தொப்புள் கொடி உடம்பைச் சுற்றி கழுத்தைப் பின்னிப் பிறக்கும். அவ்வளவுதான்,
முத்தம்மா கிழவி வருவோர் போவோரை கண்கானித்துக்கொண்டிருந்தாள்.
“சீர் அடிச்சுரும் புள்ளைக்கு. தூரமாப் போனவ, நேத்து புருஷன் கிட்ட பொழங்குனவ யாரும் வந்துராதீக” அல்லா கோயிலுக்கு தூக்கிட்டு போக வச்சுறாதீக டி எச்சரித்துக் கொண்டிருந்தாள்.
அன்று வேலை முடிந்து அவனது அப்பா வந்தார். கையில் ஒரு பொட்டலமும் வாயில் ஒரு பேருமாக
முடிவு செய்த பெயரைக் கேட்டதுமே வந்தது அவருக்குக் கோபம். கூலுப் பானை உடைந்தது. ஏற்கனவே அடாத மழையில் சுவரெல்லாம் நீர் குடித்தும் தரை ஈரமாகவும் ஒரு நெடி வீசிக்கொண்டிருந்த குடிசைக்குள் கூலுப்பானை வேறு தன் பணியைச் செய்துகொண்டிருந்தது.
“ஏய் எம் புள்ளைக்கு அவ யாருடி பேரு வைக்க. என்னாது சாமிப் பேரா . யாருக்குப் பொறந்தான் எனக்கா சாமிக்கா ?
இங்க பாரு அவனுக்கு பேரு வச்சுட்டேன். தலைவர் பேரு வாய்க்குள்ள நுலைஞ்சா கூப்பிடு இல்லைனா வேண்டாம். கிழம்பு இங்க இருந்தா எனக்கும் முனியாண்டினு பேரு வச்சாலும் வைப்பா உங்காத்தா .”
பச்சை உடம்போடு அவனையும் தூக்கிக் கொண்டு அவர் பின்னால் நடந்தாள் குருவம்மாள். அவனும் கடந்தான் தன் முதல் பயண தூரத்தை அம்மாவின் இடுப்பில் இருந்தபடி இரு பெயர்களையும் சுமந்த படி.
தொடரும்