நமது தலைவரும் ஒரு கழுதையும்
ஒரு நாள் நமது தலைவருக்குக் காட்டு உலா போகும் ஆசை ஏற்பட்டது. குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் காட்டில் முகாமிட்டு, காட்டு வளங்களைக் கண்டு இரசிக்க வேண்டுமென்று தீர்மானித்துத் தனது தொண்டர்களிடம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படிக் கேட்டுக் கொண்டார்.
எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்ட தொண்டர்கள் தம்மோடு ஒரு கழுதையையும் கூட அழைத்துச் சென்றனர்.
”கழுதை எதற்கு..?” என்று நமது தலைவர் கேட்டார்.
”ஐயா… மூன்று மாதங்களில் எப்போதாவது நம்மில் யாருக்காவது தமது மனைவிமார் ஞாபகம் வந்து விடலாம். அவ்வேளை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதற்காகத்தான் இந்தக் கழுதை!” என்றான் தொண்டர் தலைவன்.
”ஓ..!” என்று, ஏதோ புரிந்தது போலத் தலையாட்டிக் கொண்டார் நமது தலைவர்.
காட்டுக்குள் வந்து ஒரு மாதம் கூடக் கழியவில்லை. அதற்குள், தனது மனைவி பற்றிய ‘எண்ணம்’ தலைவரை வாட்டியெடுத்தது. கூடவே, தொண்டர் தலைவன் முன்னேற்பாடாக ஏற்பாடு செய்துள்ள கழுதையும் அவரது மனக் கண் முன்னால் வந்து நின்றது.
கழுதையைத் தனது கூடாரத்துக்குள் அழைத்து வரும்படிக் கட்டளையிட்டார் நமது தலைவர். தொண்டர் தலைவன் அதனை அழைத்து வர, ”சரி..நீ சற்று நேரம் வெளியே நில்; எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது.” என்றார் தலைவர்.
தொண்டர் தலைவன் வெளியே போய் நின்ற சில நிமிடங்களில் கழுதையின் சத்தம் பெரிதாகக் கேட்டது. அவன் கூடாரத்துக்குள் மெல்ல எட்டிப் பார்க்க, அங்கே…
நமது தலைவர் கழுதையைக் கட்டிப் பிடித்து முத்தமிடுவதையும் அதைச் சகிக்காத கழுதை சத்தமிட்டுக் கத்துவதையும் கண்டான்.
சர்வ அதிகாரம் படைத்த தலைவரை இடையூறு செய்ய விரும்பாத தொண்டர் தலைவன் மௌனமாக வெளியே நின்றான்.
அடுத்த சில நிமிடங்களில் நமது தலைவரின் ஒப்பாரி சத்தம் கேட்டது.
பதைபதைப்புடன் உள்ளே ஓடிச் சென்றான் தொண்டர் தலைவன். கழுதை தனது பின்னங் கால்களால் உதைத்த உதையில் கூடாரத்தின் ஒரு மூலையில் போய் விழுந்திருந்த நமது தலைவர், ”ஐயோ..அம்மா..அப்பா..” என்று அரற்றிக் கொண்டிருந்தார்.
”ஐயா..”என்றான் தொண்டர் தலைவன் மிகப் பவ்வியமாய்.
”மடையனே..பயிற்சி கொடுக்காத முரட்டுக் கழுதையை எனக்குத் தந்த உன்னை…” என்று, அந்த வேதனையிலும் உறுமினார் நமது தலைவர்.
தொண்டர் தலைவன் கை கட்டி, வாய் பொத்தி, மிக நிதானமாகச் சொன்னான்.
”ஐயா தலைவரே..! இந்தக் கழுதை நன்றாகப் பயிற்றப்பட்டதுதான். ஆனால், இது பயிற்றுவிக்கப்பட்டது பிரயாணம் செய்வதற்கன்றி, கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பதற்கல்ல. இன்னும் விளக்கமாகச் சொன்னால், நமது தொண்டர்களில் யாருக்காவது தமது மனைவிமாரின் ஞாபகம் வரும்போது அவர்கள் இந்தக் கழுதையில் ஏறித் தமது வீடுகளுக்குச் சென்று வருவார்கள். அதற்காகத்தான் நாம் இதனை அழைத்து வந்தோம்…ஆனால் நீங்களோ, கழுதையையே மனைவியாக்கிக் கொண்டீர்களே,ஐயா..!”
நமது தலைவரின் முகம் வெட்கத்தில் அஷ்ட கோணலாகிப் போன போக்கைப் பார்க்க வேண்டுமே…!