மழையின் நிமித்தமாய்

மழையின் நிமித்தமாய்
அவசரமாய் இறக்கி விடப்படுகிறது
பேரூந்தின் சன்னல் கண்ணாடி

வாகனம் நிறுத்தி ஒதுங்குகிறார்கள்
நனைதல் தவிர்த்து

மழை கடிந்து கொள்கிறார்கள்
மாலை வீடு திரும்புவோர்

மழையின் நிமித்தமாய்
பறவைகள் உறக்கமின்றியே
இருக்கின்றன மரக்கிளைகளில்

முறிந்த மரக்கிளையில் உள்ள கூட்டினை
மீண்டும் ஒட்ட வைக்க நாம் முயல்வதில்லை

மழையின் நிமித்தமாய்
சாலைகள் செயலற்று போகிறது

வேகமாய் செல்லும் ஒற்றை வாகனம்
மழைக்கு நீர் இரைத்து போகிறது

மழையின் நிமித்தமாய்
தேநீர் கடைகள் நிரம்பி வழிகிறது

மழை நீர் நிரம்பிய குட்டையை போல

மழையின் நிமித்தமாய்
காகித கப்பலோடு இணைந்து
தானும் நனைந்து கொண்டிருக்கிறாள்
நடைபாதை சிறுமி…

எழுதியவர் : வைகுண்டராமன்.ப (5-Feb-14, 3:37 pm)
சேர்த்தது : வைகுண்டராமன்.ப
பார்வை : 92

மேலே