நெய்தல் அம்மாக்கள்

மெல்லிய தேகம்
செருப்பில்லாத பாதம்
மங்காத பார்வை
சுங்கடிச் சேலை
அவளின் அடையாளம்

சரளமான பேச்சு
மீன் வாடை மூச்சு
வெற்றிலையால் சிவந்த வாய்
உழைப்பால் முறுக்கேறிய கை
அவளுக்கு அடையாளம்

சூரியனுக்கு முன் எழுகிறாள்
சந்திரனுக்கு பின் அயர்கிறாள்
இவள் கண்ணுறங்கும் நேரம்
யாருக்குத் தெரியும் என்பது
யாருக்கும் தெரியாது

எத்தனை வேலைகள்
அத்தனையும் இவளுக்கு
கை வந்த கலைகள்
ஆணுக்கு நிகராய் நிற்கும்
இவர்கள் தேகத்தால் இரும்புச்சிலைகள்

மண் வாசம் மறந்த பூமி
மீன் வாசம் அணிந்த சாமி
அலையோட தாலாட்டில்
வலை மீது படுக்கை
ஒற்றை அறையே இவளது உலகம்

வெயிலோ பனியோ
வித்தியாசமில்லை
மழையோ புயலோ
விசும்பல் ஏதுமில்லை
எல்லாம் இவளுக்கு ஒண்ணு தானே

வாய் கணக்காய்
வட்டி கணக்கு
இவளுக்கு அத்துப்படி
மொத்த குடும்பமுமே நடக்கும்
இவள் வாய் சொன்னபடி

ஆண்களைக் காட்டிலும்
பொறுப்புள்ளவள்
குடி, போதை, சூது
சீட்டு, சோம்பேறித்தனம்
மீது வெறுப்புள்ளவள்

பாசம் அன்பு நேசம்
வீரம் கோபம் மூர்க்கம்
சாந்தம் துணிவு கனிவு
கருணை எல்லாம் கலந்த
மாதே என் நெய்தல் நிலத்தாயே

எழுதியவர் : ஆ.லாரன்ஸ் (5-Feb-14, 4:06 pm)
பார்வை : 300

மேலே