மாண்புமிகு மானுடமே

மானுட தெய்வமே!
கடவுளை மிஞ்சிவிட்ட
கற்பகத் தருவே!

போன
யுகத்து கடவுளால்
படைக்க முடியாத ஒன்றை
நீ அதி அற்புதமாகப்
படைத்துவிட்டாய்!
''சாதீ''

படைத்தவன் தானே சுமக்க
வேண்டும்!
நீ படைத்த உன்
சிருஸ்ட்டியை
தலையில் தூக்கிச் சுமப்பதில்
நீ கடவுளை
மிஞ்சிவிட்டாய்!

எல்லாத் துன்பங்களையும்
தூக்கிச் சுமப்பதில் நீ
ஆயிரம் யானைகளுக்குச் சமம்!
ஆகையால் தான் உனக்கு
'மதம்' பிடித்துவிட்டது...

ஆண்டவன் கட்டளையை மீறி
ஆப்பிளைத் தின்று
ஆறாம் அறிவைப் பெற்ற
அறிவு ஜீவியே!

நீதியை விலைக்கு வாங்கும்
நெற்றிக்கண் உடையோனே!
தான் வாழ பிறரை அழிக்கும்
தவப் புதல்வனே!

இப்போதெல்லாம்
பிரம்மன் எதையும்
படைப்பதில்லை!
எம தர்மன் கூட
ஏட்டை உன்னிடம்
கொடுத்துவிட்டான்!
சொர்க்கமும் நரகமும்
உன் கையில்

மானுட தெய்வமே!
கடவுளை மிஞ்சியக்
கற்பகத் தருவே!
பஞ்ச பூதங்களையும்
பட்டியல் போட்டு விற்கும்
பள்ளிகொண்டானே!

நீ படைத்த உயிர்களையே
'பாம்' போட்டு அழிப்பதால்
பரம்பொருளே! உனக்கு
லாபம் தான் என்ன?

ஆளப் பிறந்தவனே
ஆண்டவனின் தூதுவனே!
குடிமக்கள் கோரிக்கையை
கொஞ்சம் ஏற்பாயோ!

பிச்சை எடுக்கும் ஜென்மம்
வேண்டாம் - இனி
பேதமை வாழ்க்கையை
அளிக்கவேண்டாம்!

இலவசங்கள் எமக்கு
வேண்டாம் - எம்மை
இளிச்சவாயர் ஆக்க வேண்டாம்!

குடிக்க கொஞ்சம் தண்ணீர்
கேட்டால் 'குவாட்டரை' எடுத்து
நீட்ட வேண்டாம்!

கல்விக் கூடம் என்ற பெயரில்
கந்து வட்டிக் கடையும்
வேண்டாம்!

இவை தான் இறைவா
எங்களின் கோரிக்கை
முடிந்தால் நிறைவேற்று
இல்லை என்றால் இந்த
பூலோகத்தில்
கடவுளுக்கா பஞ்சம்?

எழுதியவர் : பட்டுக்கோட்டை,முருகேசன் (10-Feb-11, 4:01 pm)
சேர்த்தது : சி.முருகேசன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 525

மேலே