ஆசையில் முதல் கடிதம்

விறு விறு என்று எல்லா பைல்களையும் சரிபார்த்து விட்டு அவற்றில் தனது கையெழுத்தைப் பொறித்துக்கொண்டிருந்தான் முகுந்தன். “சார்……” என்று கதவைத்தட்டும் சத்தம் கேட்டு நிமிர்ந்தவன் “உள்ளே வாங்க” என அழைப்பு விடுத்தான். “பைல் எல்லாம் சரியா சார்? லேட்டாயிடுச்சாம் பொஸ் கொண்டு வரச்சொன்னார்.” ஆபிஸ் பியுன் தலையை சொரிந்து கொண்டு கேட்டான். “இந்தாப்பா எல்லாம் சரி” என பைல்களை கொடுத்துவிட்டு, “போகும்போது அந்த அசிஸ்டண்ட மேனேஜர் போர்ட்ட சரியா மாட்டிட்டு போ.” என உத்தரவும் போட்டான்.

அன்று அவனால் விரைவாகவும், ஒரு மனநிலையிலும் வேலை செய்ய முடியவில்லை. நேற்று இரவு அவன் அம்மா திலகம் பேசிய பேச்சுக்கள் இன்னும் அவன் மனதை வாட்டிக்கொண்டிருந்தன. “இதோ பார் முகுந்தன், எனக்கு வயசாகிக்கிட்டே போகுது. முன்ன மாதிரி ஓடியாடி வேல செய்ய முடியல. உடம்பு முழுக்க நோய். நானும் கூடிய சீக்கிரம் உன் அப்பாகிட்ட போய் சேரப்போரன்…..” “அம்மா!” இடையில் அலரினான் முகுந்தன். “ஏன்டா கத்துற? உண்மையத்தான் சொல்றேன். அதனால பிடிவாதம் பிடிக்காம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு குடும்பஸ்த்தனாகு. நல்ல பெரிய கம்பனியில அசிஸ்டண்ட் மேனேஜரா வேலை செய்யுற. கைநிறைய சம்பாதிக்குற. கொஞ்சம் வசதிவாய்ப்போட இருக்குற. பின்ன எதுக்கடா இப்ப கல்யாணம் வேனாம்னு வர்ற சம்பந்தம் எல்லாத்தையும் தட்டிவிடுற? உனக்கும் வயசாகிக்கிட்டு போகுது அதையும் புரிஞ்சுக்க.” என திலகம் தனது ஆதங்கத்தை கொட்டினாள். “அம்மா நான் எதிர்பார்க்குற மாதிரி பொண்ணாக அவங்க ஒருத்தரும் இல்ல. அதனால பிடிக்கல. அதோட பார்த்த உடன எப்படி சம்மதிக்க முடியும்? அவளோட பழகனும், அவட கேரக்டர புரிஞ்சுக்கனும்……..” என முகுந்தன் தனது கருத்துக்களை சொல்லிக்கொண்டிருக்கும்போதே “போதும்டா நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது. ஒன்னு நீயா யாரையும் காதலிச்சு கல்யாணம் பண்ணு, இல்ல நான் என் மனசுக்கு புடிச்ச ஒருத்திய காட்டுறேன் அவ கழுத்துல மூணு முடிச்ச போடு.” என்று கூறிவிட்டு உள்ளே சென்றார்.

“சார் டீ கொண்டு வந்திருக்கேன்.” என மீண்டும் பியுன் வந்து நிற்க, நேற்றைய நினைவுகளிலிருந்து மீண்டு வந்தான் முகுந்தன். “சார், புதுசா ஒரு லேடி டைப்பிஸ்ட சேர்த்து இருக்காங்களாம். இது அவுங்களோட பையோ டேட்டா. ஜெனரல் மேனேஜர் உங்ககிட்ட கொடுக்க சொன்னாரு. அவுங்கள உங்க ரூம்லேயே வேலைக்கு வைக்க சொன்னாரு.” என ஒரு கவரை நீட்டினான். “சரி சரி அந்த ஓரத்துல மேசைய போட்டு அரென்ஜ்பண்ணு.” என கவரை வாங்கிக்கொண்டான். நேற்று அம்மாவின் வார்த்தைகளை நினைத்து வேதனைப்பட்டுக்கொண்டிருந்ததால், கவரை பிரித்துப்பார்க்காமல் பைலுக்குள் வைத்தான். அரைமணி நேரத்தின் பின் “எக்ஸ் கியுஸ் மீ” என ஒரு பெண்ணின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தவன் அப்படியே ஆச்சரியத்தில் மூழ்கிப்போனான். தலைநிறைய பூச்சூடி, நெற்றியில் திருநீறு, குங்குமம் அணிந்து, சேலை உடுத்து இக்கால இளம்பெண்களின் கலாச்சாரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு அமைதியுடனும் சிறு புன்னகையுடனும் நின்றுகொண்டிருந்தாள் ஓர் இளமங்கை. “ஹலோ சார்! நான் சுமதி. இங்கு கம்ப்யூட்டர் டைப்பிஸ்ட்டாக வேலை செய்ய வந்திருக்கேன்.” என்றாள். “ஹலோ நான் முகுந்தன். உங்க இடம் அங்க இருக்கு.” என கையை காட்டிவிட்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அன்றிரவு அவனால் உறங்கமுடியவில்லை. சுமதி அவன் கண்கள் முன்னால் நிற்பது போலவே அவனுக்கு தோன்றியது. “என்ன இது எத்தனையோ பெண்களை பார்க்கிறேன். ஆனால் இவள் மட்டும் என் மனசுக்குள் நிக்கிறாளே? இதான் காதலா? இல்ல வேறெதுவுமா?” என தனக்குள்ளேயே குழம்பிக்கொண்டிருந்தான். “அம்மாவிம் சொல்வோமா? இல்ல அவளிடம் கொஞ்சம் பழகிப்பார்ப்போம். அவளுக்கும் என்னை பிடிச்சிருந்தால் அதுக்குப்பிறகு சொல்வோம்.” என தீர்மானித்துவிட்டு உறங்கப்போனான். அன்று கனவிலும் அவன் சுமதியை விடவில்லை.

மறுநாள் காலை “அம்மா இனிமேல் நீங்க கஷ்டப்பட வேண்டியதில்லை. கூடிய சீக்கிரம் நல்ல சேதி சொல்றேன்.” என சந்தோஷமாகக் கூறிக்கொண்டே திலகம் கொடுத்த தேநீரை குடித்தான். “எனக்கும் மத்த அம்மாமார்களைப்போல பேரப்பிள்ளைகளை கொஞ்சனும், தன் பிள்ளை சந்தோஷமாய் வாழ்றத கண் குளிர பாக்கனும்னு ஆசையாய் இருக்காதா? அதுதான் என் கவலை” திலகம் கூற “சரி சரி நேரமாயிடுச்சு நான் வர்றேன்.” என வேகமாக கிளம்பினான் அலுவலகத்திற்கு.

அலுவலகத்தில் தனது ஆசனத்தில் அமர்ந்ததும் முதல் வேலையாக சுமதியின் பையோடேட்டாவை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தான். முதலாவதாக தென்பட்டது வயது. இருபத்துநான்கு. அப்பாடி! எனக்கு இருபத்தொன்பது….” சந்தோஷத்துடன் பெயரைப் பார்க்க கண்களை உயர்த்தினான். அப்போது “குட்மோர்னிங் சார்” சுமதி உள்ளே வந்தாள். “குட்மோர்னிங்” என கூறிக்கொண்டே பையோடேட்டாவை பைலுக்குள் மறைத்தான். சுமதி மிகவும் பொறுமையாகவும், அழகாகவும் தனது வேலைகளை செய்து முடித்தாள். அதனால் முகுந்தனுக்கு அவள்மேல் அதிகமாக விருப்பம் ஏற்பட்டது. அவளும் இடைக்கிடை முகுந்தனைப் பார்த்து புன்னகைத்து வந்தாள். நாட்கள் சில கழிந்தன.

ஓர் நாள் இரவு “நாளை என் விருப்பத்த சுமதியிட்ட சொல்லிட்டு, அவள் விருப்பத்தையும் கேட்டுவிட வேண்டும். எப்படி சொல்வது? ஒரு கடிதம் எழுதிடவேண்டியதுதான்.” என முடிவெடுத்து தனது எண்ணங்களையும், விருப்பங்களையும் காகிதத்தில் வடித்தான். மறுநாள் காலை அலுவலகத்தில் அவன் மிகவும் பதற்றத்துடன் சுமதிக்காக காத்துக்கொண்டிருந்தான். மிகவும் எதிர்ப்பார்ப்புடனும் ஆசையுடனும் யாருக்காக காத்திருந்தானோ, அவளும் உள்ளே வந்தாள். “குட்மோர்னிங் சார்!” என்று உள்ளே நுழைந்தவள், முகுந்தனிடம் இருந்த அதே பதற்றத்துடன் ஒரு கடிதத்தை முகுந்தன் முன் நீட்டினாள். முகுந்தனின் மனதில் கோடானகோடி பட்டாம்பூச்சிகள் சிறகைவிரித்துப் பறக்க ஆரம்பித்தன. “அவளும் தன் காதலை வாயால் சொல்ல முடியாமல் கடிதமாய் தருகிறாளே….” என நினைத்துக்கொண்டே படிக்க ஆரம்பித்தான்.

கடிதத்தின் ஒவ்வொரு வரிகளையும் வாசிக்கும்போது அவன் மனதில் பறந்த பட்டாம்பூச்சிகள் ஒவ்வொன்றும் சிறகொடிந்து துடிதுடித்து இறப்பதுபோல் உணர்ந்தான். காரணம் அது காதல் கடிதம் அல்ல. தனது கணவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததால் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு வீட்டில் இருப்பதாகவும் தனக்கு இன்று விடுமுறை வேண்டும் என்று அவள் சமர்பித்த விடுமுறைக்கடிதம் அது. “உங்களுக்கு கல்யாணமாயிடுச்சா.?” என நாதடுமாற வந்த அழுகையையும் கட்டுப்படுத்திக்கொண்டு கேட்டான். “ஆமாம் சார். ஏழு மாதங்கள் தான் ஆகுது. அவர் அந்த ஊருக்கு டிரான்ஸ்வராகி வந்ததும் நான் என்ட பழய வேலய விட்டுட்டு இங்க வேலைக்கு வந்தேன். நீங்க பர்மிஷன் கொடுத்தா இரண்டு நாட்கள் அவரோட இருந்து ஆஸ்பத்திரி வேலைகள கவனிப்பேன்.” என தாழ்மையாக கூறினாள். அவளிடமிருந்து இவன் எதிர்ப்பார்த்த சொல்லை இப்போது அவன் கூறினான். “ஓ.கே.”

அவள் சென்றதும் அவளது பையோடேட்டாவை மீண்டும் எடுத்துப்பார்த்தான். அதிலே அவள் திருமணமானவள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கணவன் பெயர் பாலசுப்ரமணியம். “சே! ஒழுங்கா கவனிக்காம அவசரபட்டுட்டேனே. என்ன மடத்தனம்?” என தன்னையே நொந்துகொண்டான். அவன் ஆசையாக எழுதிய கடிதத்தை தனது மனதைப்போலவே சுக்கல் சுக்கலாக கிழித்து எரிந்தான். வீட்டிற்கு தொலைபேசி மூலம் “அம்மா உங்க இஷ்டப்படியே பொண்ணு பாருங்க” என்றான். திலகம் ஆனந்தமடைந்தாள். முகுந்தன் அழுகையுடன் கிழித்துப்போட்ட கடிதத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

எழுதியவர் : சித்திரவேல் அழகேஸ்வரன் (6-Feb-14, 8:16 pm)
பார்வை : 189

மேலே