அன்பும் சிவமென எப்போது உணர்வீர் வினோதன்

விழியோரம் விழுந்து
கிடக்கும் வினாக்களோடு,
கடந்து நடக்கும் - அழுக்கு
பிஞ்சுகள் என்றாவது
உம் மனம் பற்றியதுண்டா ?

வற்றிய வயிறோடு
கடவுளர் குடியிருப்பின்
கதவோரம் - கந்தல் உடுத்தியபடி
அம்மாவென உச்சரித்தபடி
நிற்கும் யாரேனும் - உம்
கால்களை நிறுத்தியதுண்டா ?

தடதடக்கும் புகை வண்டியின்
வயிற்றில் நின்றுகொண்டு
தொண்டை திண்டாட நின்றாடி
கானம் உதிர்க்கும் - பாரையிதுவரை
பார்த்திரா பாமரர்கள் யாரேனும்
உம் பார்வைக்குள் வந்ததுண்டா ?

ராட்சத ராட்டினங்களின்
காலடியில் நின்றபடி
பஞ்சுமிட்டாய் தின்றுதிரியும்
பிஞ்சுகளை - வெறித்தபடி
கையேந்தும் முகங்களில்
ஒன்றாவது - உம் கனவுகளின்
கதவுகளை கைதவறி தட்டியதுண்டா ?

நட்சத்திர உணவுவிடுதியில்
இரைப்பைக்குள் புகாத
எஞ்சிய உண் பொருளை
விடுத்து வரும்போது - உம்
கண்ணோரம் வருவதுண்டா
வயிற்றில் கைவைத்து - மறு
கையேந்தும் யாரேனும் ?

பிச்சையை தொழிலாக்கி
உண்டு கொழிக்கும்
நூறை விட்டுவிடுங்கள் !
பசியால் நுரை தள்ளும்
உயிர்களை மட்டும்
எண்ணிப் பாருங்கள் !

நீங்கள் நிராகரிக்கும்
யாரேனும் உண்மையான
பசியோடும் நிற்கலாம் - பசி
அக்கண்வழி நீராகலாம் - இருந்தும்
உதவா பழிக்கு நீராளாகலாமா ? ளா

கடவுளின் நீட்டாத கைகளுக்குள்
காந்திகளைத் திணிக்கும் கனவான்களே...
அன்பும் சிவமென எப்போது உணர்வீர் ?

எழுதியவர் : வினோதன் (6-Feb-14, 8:39 pm)
பார்வை : 165

மேலே