மனிதம் எமனிடத்தில் மட்டும்

மனிதம் எமனிடத்தில் மட்டும்...
===============================
அசுரவேகப் பயணத்தில்
தூக்கி எறியப்பட்ட ஒருவன்
குருதி கொட்டியும்
உடல் துடித்தும்.....
அசைவற்றவனாய்...
சுற்றி கூட்டமாய் மக்கள்
காற்றினை மறைத்துக் கொண்டு
மக்களா?? மாக்களா??
மனிதாபத்துடன் ஒருவன்
உயிர் இருக்கிறதா??
தொட்டுப் பார்க்கிறான்
மணிக்கட்டின் துடிப்பை
துடிப்பை அறிந்தானோ இல்லை
துடித்துக் கொண்டிருந்த
மணிக்கட்டின் கடிகாரம் அறிந்தான்
இனி அது அவன் உடைமையாய்.....
இதயத் துடிப்பை
அறிந்து சொல்வதாய் ஒருவன்
சட்டைப் பையின் பணத்தோடு
சற்றும் இரக்கமின்றி.....
இதயத் துடிப்பை அறிந்தானோ இல்லை
இருக்கும் பணத்தை
அறிந்துகொண்டான்
இனி அது அவன் பணமாய்...
இன்னுமொரு இரக்கமுள்ளவன்
தெறித்து விழுத்த அலைபேசியில்
தகவல் தெரிவிப்பதாய்
திருட்டு எண்ணத்தில்....
குற்றுயிராய் கிடந்தவனின்
அலைபேசியோடு பேசிப் பேசி
தகவல் தெரிவித்தானோ இல்லை
இனி அது அவன் அலைபேசியாய்...
இது கூற்றுவனின் தருணம்
உயிர் கொண்டு செல்ல வந்தவன்
மனிதமற்ற மனிதன் செயல்களில்
மனமுடைந்தவனாய்...
எஞ்சியது உயிர் ஒன்றுதான்
அவனிடமே இருக்கட்டும்
கூற்றுவன் வெறும் கையோடு
இனி உயிர் மட்டும் அவன் சொந்தமாய்....