எலிப்பா
உடைத்து வைத்திருந்த
தேங்காய் உள்ளே
நவீன ஓவியங்கள்
பல்லால் வரைந்திருந்தன
எலிகள்!
கொஞ்சம் அயர்ந்துவிட்டால்
கொஞ்சமும் இல்லாமல் செய்யும்
வஞ்சகர்கள் என்பதால்
சமையல் பண்டங்களை
எட்டாத இடத்தில்
வைக்க நினைவூட்டுதலில்
மனைவிக்கு
ஞாபக சக்தியை
அபிவிருத்தி செய்யும்
ஊக்கமாத்திரைகள் ஆகின்றன
இந்த எலிகள்.
கொண்டை முடி
சீப்பு, பற்தூரிகை
விளக்குத் திரி,
என்று எதையும்
விட்டுவைக்காத
இந்த எலிகள்
என் சவரக் கத்திகளையும்
கொண்டுபோகும் நாட்களில்
நான் தேவதாசாகிறேன்..
பூனைகளின்
உயிர்த்தோழனாய்
மாறிபோனதிலிருந்து
பானைகளில் ஆக்குவதற்கும்
கிலி கொடுத்த இந்த
எலிகலிலிருந்து
நட்டமடைந்திருந்தாலும்
நட்பின் வலிமையை
மட்டும் கற்றுக் கொண்டேன்