சினம்
முன் தோன்றி
முழுதறிந்த
மூடனே!
முன் வினை ஈடேற
என் வினை நீ செய்தாய்...
இவ்வினைப் பலனனைத்தும்
எவ்விதம் ஈடு செய்வாய்?
இன்னொரு வேடம் தருவாயா?
கண்களை மூடிக் கொள்வாயா?
வேற்றிடந் தந்தாய்...
வித்தைகள் செய்தாய்!
சோதனை செய்தாய்...
சொத்தெல்லாம் கொய்தாய்!
வெற்றிடமும் கிடைக்கவில்லை
கற்றதுவும் ஊறவில்லை...
நீ நடத்தும் தெருக்கூத்தில்
நான் நடித்தேன்
நாள் முழுதும்...
பாராட்டும் பழிச்சொல்லும்
என்னைச் சேர்ந்தன!
வினைப் பயன் என்றாய்!
விதி செய்தோன் நீதானே!
முன் தோன்றி
முழுதுஞ் செய்த
மூடனே!
என் வினை ஈடேற
இங்ஙனம் நீ செய்தாய்...
உன் வினை விளைவனைத்தும்
எவ்விதம் ஈடு செய்வாய்?