தமிழே என் தமிழே

தமிழே என் தமிழே!..

கற்பூர வாசமோ நீ?...
கைகளில் சிக்காமல்
காற்றோடு கலக்கிறாய்...
கனவினில் எழுப்பி
கவிதையாய் படர்கிறாய்...

செம்பருத்தியின்
சிறு மொட்டோ நீ?...
விரிய விரிய பேரழகு!...
விரலிடையே தேனமுது! - மண்ணில்
விழுந்தாலும் அருமருந்து!...

அழகு பசுங் கோரையின்
அடிக்கிழங்கோ நீ?...
உள்ளத்தில் பதுங்கி
உணர்வுகளில் கவியாகிறாய்!...

காய்ந்த மண்ணில் விழுந்த - வான்
கண்ணீர்க் கூட்டமோ நீ?...
புழுதியை அடக்கி
புவி முழுதும் பயணிக்கிறாய்!...- நாளை
முளைக்கும் விதைகளுக்கு
உணவாகி மரணிக்கிறாய்!... - மீண்டும்
விருட்சத்தில் வெளிப்பட்டு
விளையாடிக் களிக்கிறாய்!...

போதுமடி
பூரணமே!..
எழுத்து கோளில் மை இல்லை
என் விரலில் தெம்புமில்லை

நீளும் உன்னழகை
மாளும் என் சதைகள்
தாளில் வடித்திடல் ஆகாதடி!...

உன் இடம் பிடிக்க
ஒரு மொழிக்கும் அறிவில்லை...
உன்னிடம் சேர - ஆங்கில
ஊமைகளுக்கு வழியில்லை…

எழுதியவர் : செல்வா பாரதி (8-Feb-14, 5:41 pm)
பார்வை : 199

மேலே